புதிதாக வீடு கட்டும் போது அதில் அடிப்படை கட்டுமானங்களில் கவனம் செலுத்தினால் போதும் என்று தான் பலரும் நினைக்கின்றனர். ஆனால், சுவர்கள் கட்டு வது, அதில் டைல்ஸ் எனப்படும் பதிகற்கள் அமைப்பது தொடர்பான பல்வேறு விஷயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
சமீப காலமாக, வீடுகளில் தரைகள் மட்டுமல்லாது, சுவர்களிலும் பதிகற்கள் அமைக்கும் பழக்கம் பரவலாக அதிகரித்துள்ளது.இது போன்று சுவர்களில் பதிகற்கள் அமைத்துவிட்டால், எவ்வித ஈர கசிவும் ஏற்படாது என்று தான் பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர்.
உண்மையில் தண்ணீர் பயன்பாடு அதிகம் உள்ள இடங்களில் சுவர்களில் பதிகற்கள் அமைப்பது நல்ல பலனை தரும் என்று நம்பப்படுகிறது.
ஒருவகையில் இது சரியான வழிமுறையாக தெரிந்தாலும், பயன்பாட்டு நிலையில் பதிகற்கள் அமைக்கப்பட்ட சுவர்களில் வேறு எந்த சீரமைப்பு வேலையும் செய்யமுடியாது.
குறிப்பாக, பெரும்பாலான வீடுகளில் குளியலறையில் பிளம்பிங் குழாய்கள் கன்சீல்டு முறையில் சுவருக்குள் பதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இவ்வாறு சுவருக்குள் பிளம்பிங் குழாய்களை பதிக்கும் நிலையில் அதில், பிற்காலத்தில் ஏதாவது உடைப்பு ஏற்பட்டது தெரிந்தால், டைல்ஸ் பதித்த நிலையில் சீரமைப்பு பணிகள் பாதிக்கப்படும்.
எனவே, உங்கள் வீட்டு குளியலறை உள்ளிட்ட பகுதிகளில் பதிகற்கள் அமைக்க வேண்டும் என்று திட்டமிட்டால், அங்கு பிளம்பிங் குழாய் அமைக்கும் பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, பிளம்பிங் குழாய்களை தேர்வு செய்வதில் துவங்கி, வற்றை இணைப்பது வரையிலான நிலைகளில் கவனமாக செயல்பட வேண்டும்.
குறிப்பாக, பிளம்பிங் குழாய்களை அமைக்கும் போது அதில் உடைப்புகள் எதுவும் உள்ளதா என்பதை ஆரம்பத்திலேயே உரிய கருவிகளை பயன்படுத்தி சரி பார்க்க வேண்டும். ஒரு இடத்தில் தண்ணீர் வினியோகத்துக்காக பிளம்பிங் குழாய்கள் அமைக்கும் போது அதில் முழுமையாக தண்ணீர் பயன்படுத்தும் போது, எவ்வளவு அழுத்தம் ஏற்படும் என்பதை சரி பார்ப்பது அவசியம்.
இதற்கான சில நவீன கருவிகள் வந்துள்ள நிலையில், உரிய வல்லுனர்களை அணுகினால், இத்தகைய கருவிகள் வாடகை அடிப்படையில் கிடைக்கும். இக்கருவியை வரவழைத்து, பிளம்பிங் குழாய்களில் அதிகபட்ச அழுத்தம் கொடுத்து, உடைப்பு, கசிவு ஏற்படுகிறதா என்பதை சரி பார்க்க வேண்டும்.
இத்தகைய ஆய்வு பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் தான் சுவரில் பதிகற்கள் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதில் தற்போது, தரை போன்று சுவர்களுக்கும் ஸ்லாப் வடிவத்தில் பெரிய பதிகற்கள் வந்துள்ளதால், அதை பயன்படுத்துவது நல்லது என பரிந்துரைக்கப்படுகிறது.
சுவர்களில் பதிகற்கள் அமைத்துவிட்டால் அங்கு அடிக்கடி உடைத்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள முடியாது என்பதை கவனத்தில் வைத்து செயல்பட வேண்டும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.