பொதுவாக சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நினைப்போர், அதற்கான நிதியை வங்கியில் கடனாக பெறுவதற்கு முயற்சி செய்கின்றனர். அப்போது, வங்கிகள் கேட்கும் அனைத்து ஆவணங்களையும் கொடுப்பதற்கு மக்கள் எவ்வித தயக்கமும் காட்டுவதில்லை.
எப்படியாவது அந்த வங்கியிடம் இருந்து கடனுக்கு ஒப்புதல் கிடைத்தால் போதும் என்ற நிலையில் தான் பெரும்பாலான மக்கள் இருக்கின்றனர். ஒரு இடத்தில் ஒரு குறிப்பிட்ட தேவைக்காக கடன் பெறும் போதே, அதை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் என்ன? அது தொடர்பான நடைமுறைகள் என்ன என்பதை அறிய வேண்டும்.
பெரும்பாலான வங்கிகள் கடன் கணக்கை முடிக்கும் நிலையில், அதற்கான வழிமுறைகளை சுமுகமாக முடிப்பதில் தான் கவனம் செலுத்துகின்றன. ஆனால், குறிப்பிட்ட சில வங்கிகள், நிதி நிறுவனங்கள் வீட்டுக்கடன் கணக்கை முடிக்கும் நிலையில் சில புதிய கட்டுப்பாடுகள், கட்டணங்களை விதிக்கின்றன.
இந்த விஷயத்தில் கடன் கணக்கை பாதியில் முடிப்பதாக இருந்தால், அதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கிகள் வசூலிப்பது நீண்டகாலமாக பழக்கத்தில் உள்ளது.
ஆனால், இதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை வங்கிகள் வசதியாக மறந்துவிடுகின்றன.
குறிப்பாக, ஒரு நபர் வீட்டுக்கடன் பெற்று அதை முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கும் நிலையில் தான் அவருக்கு, 2 சதவீத தொகையை அபராதம் அல்லது செய்முறை கட்டணமாக வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதற்கு அப்பால் உள்ள காலத்தில் கடன் கணக்கை முடிக்க வேண்டும் என்றால், நிலுவை தொகையை தான் வசூலிக்க வேண்டும்.
இது போன்று கடன் வாங்கும் நிலையில் நீங்கள் என்னென்ன ஆவணங்களை கொடுத்தீர்களா, அவை அனைத்தையும் கணக்கு முடியும் நிலையில் வங்கிகள் திருப்பித் தர வேண்டும். இந்த விஷயத்தில் கடன் வாங்கும் நபர் தான் விழிப்புடன் செயல்பட்டு, ஆவணங்களை திரும்ப பெற வேண்டும்.
வீட்டுக்கடன் தவணை காலம் என்பது நீண்டதாக இருப்பதால், பலரும் விண்ணப்ப நிலையில் என்னென்ன ஆவணங்களை கொடுத்தோம் என்பதை மறந்துவிட வாய்ப்புள்ளது. இதனால், கடன் பெற விண்ணப்பிக்கும் போது, வங்கியிடம் எந்தெந்த ஆவணங்களை கொடுத்தீர்கள் என்பதை பட்டியல் போட்டு வைக்க வேண்டும்.
இதில் என்னென்ன ஆவணங்கள் அசல் பிரதி அளிக்கப்பட்டது, அவை பிரதி ஆவணங்களாக அளிக்கப்பட்டது என்பதை பட்டியலாக வைத்திருந்தால், தேவையில்லாத குழப்பங்களை தவிர்க்கலாம். குறிப்பாக, சிலர் ஒரு குறிப்பிட்ட வங்கியில் முதலில் வீட்டுக்கடன் வாங்குகின்றனர்.
சில ஆண்டுகள் கழித்து அந்த கடனை வேறு வங்கிக்கு மாற்றுகின்றனர். இதில், முதலில் கடன் கொடுத்த வங்கியிடம் இருந்து அனைத்து ஆவணங்களும் அடுத்த வங்கிக்கு எவ்வாறு ஒப்படைக்கப்படுகின்றன என்பதில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு, கடன் கணக்கு வங்கி மாறும் நிலையில், பத்திரங்களின் தொகுப்பில் ஏதாவது சில ஆவணங்கள் விடுபட வாய்ப்புள்ளது. எனவே, இந்த விஷயத்தில் மக்கள் மிகத் தெளிவுடன் இருக்க வேண்டும் என்கின்றனர் சொத்து மதிப்பீட்டாளர்கள்.
No comments:
Post a Comment