சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள், அதற்கான பணி பொறுப்புகளை ஒப்பந்ததாரரிடம் ஒப்படைப்பது வழக்கமாக உள்ளது.
இதில் பணியாளர்களை அமர்த்துவது பெரும்பாலும் ஒப்பந்ததாரரின் பொறுப்பாக இருப்பதால், இது விஷயத்தில், உரிமையாளர்கள் தலையிடுவதை தவிர்க்கின்றனர்.
கட்டுமான பணிகளை ஒப்பந்ததாரரிடம் ஒப்படைத்தாலும், பணியாளர்களை அவர் எப்படி அமர்த்துகிறார், எப்படி வேலை நடக்கிறது என்பதை உரிமையாளர்கள் பார்க்க வேண்டும்.
எந்த பணிக்கு எந்த சமயத்தில் எத்தனை பேர் இருக்க வேண்டும் என்பதை ஒப்பந்ததாரர் முடிவு செய்யலாம்.
ஆனால், 10 பேர் வாயிலான, 2 நாட்களில் முடிக்க வேண்டிய வேலையை, 3 பேரை அமர்த்தி, அதிக நாட்கள் கடத்துவது நல்லதல்ல. இது போன்ற சூழலில், சில ஒப்பந்ததாரர்கள் வேண்டுமென்றே குறைந்த எண்ணிக்கையில் ஆட்களை அமர்த்தி, பணிகளை தாமதப்படுத்த நினைக்கலாம்.
இது போன்று வேண்டுமென்றே பணிகள் தாமதப்படுத்துவது தெரிந்தால், அது குறித்து கட்டுமான ஒப்பந்ததாரரிடம், உரிமையாளர் நேரில் பேச வேண்டும். உங்கள் வீட்டுக்கான கட்டுமான பணியில் எப்போது, எத்தனை பேர் பணி புரிய வேண்டும், எதார்த்த நிலையில் நடப்பது என்ன என்பது குறித்து உரிமையாளர் விசாரிக்கலாம்.
ஆனால், உரிய காரணத்துடன் பணியாளர் எண்ணிக்கை குறைக்கப்பட்டு இருந்தால், அதில் தேவையில்லாத வாக்குவாதத்தில் உரிமையாளர்கள் ஈடுபடக் கூடாது.
உதாரணமாக, மேல் தளத்துக்கான கான்கிரீட் போடும் பணியில் அப்போதைய தேவைக்காக, 20 பேர் பயன்படுத்தப்பட்டு இருப்பர்கள்.
அடுத்த நாளில் நீராற்றுதல் உள்ளிட்ட பணிகளுக்கு, 2 பேர் இருந்தால் போதும் என்ற கருத்து தான் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக உள்ளது.
இது போன்ற சூழலில், மேல் தளத்தில் நீராற்றும் பணிகள், 15 முதல், 20 நாட்கள் மேற்கொள்ளப்படும் சூழலில் குறைந்த எண்ணிக்கையில் தான் ஆட்களை பயன்படுத்த வேண்டும். ஆனால், சுவர் கட்டும் வேலையில், 2 குழுக்கள் பணி புரிய வேண்டிய நிலையில், ஒரு குழு மட்டும் பணியில் இருந்தால், கட்டுமான வேலை தாமதமாகும்.
இத்தகைய சூழலில், 2 குழுக்களுக்கு பதில், ஒரு குழு மட்டும் கட்டுமான வேலையில் ஈடுபடுத்தப்படுவது ஏன் என்று உரிமையாளர் விசாரிப்பதில் எந்த தவறும் இல்லை.
கட்டுமான பணி நடக்கும் இடத்திலேயே குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆட்களை தங்க வைக்கும் நிலையில், வேலை நேரத்தை தேவைக்கு ஏற்ப மாற்றலாம். வெளியில் இருந்து வர வேண்டிய தேவை இல்லாத போது, காலையில் விரைவாக பணிகளை துவக்குவது நல்லது.
அதே நேரம், இரவு நேரங்களில் கட்டுமான பணிகளை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
அவசரமாக முடிக்கிறோம் என்பதற்காக இரவு நேரத்தில் கட்டுமான வேலை, பூச்சு வேலையில் ஈடுபட்டால் அது கட்டடத்தின் உறுதிக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.
No comments:
Post a Comment