Monday, September 23, 2024

நில அளவை வரைபட ஆய்வில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

 
வீடு, மனை வாங்கும் போது அதற்கான பத்திரங்கள், வில்லங்க சான்றிதழ்களை ஆய்வு செய்தால் போதும் என்று பலரும் நினைக்கின்றனர்.
உண்மையில் இதற்கு அப்பால் நில அளவை அடிப்படையில் வரைபடங்கள், ஆவணங்களையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்.
நிலம் தொடர்பான வருவாய் துறை ஆவணங்கள் என்றால் அதில் பட்டாவை வாங்கி பார்த்தால் போதும், அதில் யார் பெயர் இருக்கிறது என்பதை சரி பார்த்தால் அனைத்தும் முடிந்து விடும் என்று மக்கள் நினைக்கின்றனர்.
நிலத்தின் பட்டாவுக்கு அப்பால் அது தொடர்பான மேலும் சில விஷயங்களில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக, பத்திரத்தில் இருக்கும் சொத்தின் சர்வே எண்ணும், பட்டாவில் உள்ள சர்வே எண்ணும் சரியா என்பதை கவனிக்க வேண்டும். இதில், ஏதாவது உட்பிரிவு, பரப்பளவு மறைக்கப்பட்டு இருந்தால் அது குறித்த தகவல்களை கேட்டு பெற வேண்டியது அவசியம்.
பட்டாவுக்கும், பத்திரத்துக்கும் நிலத்தின் அளவு, சர்வே எண்ணில் வேறுபாடு பெரிதாக இருக்காது என்று பெரும்பாலான மக்கள் நம்புகின்றனர்.
இதில், உண்மையில் சர்வே எண், நிலத்தின் பரப்பளவு தொடர்பான வேறுபாடுகள் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.
இதற்கு அடுத்தபடியாக, பட்டாவுடன் சேர்ந்து எப்.எம்.பி., எனப்படும் நில அளவை வரைபடத்தை மிகசரியாக பயன்படுத்த வேண்டும்.  சொத்து வாங்குவோரில் பலரும் நில அளவை வரைபடத்தை சரியான முறையில் பயன்படுத்த வில்லை என்று கூறப்படுகிறது.
ஒருநிலம் எப்படி அளக்கப்படுகிறது என்பதை சரியாக புரிந்து கொண்டால் நிலஅளவை தொடர்பாக தெளிவு பெறலாம்.  இன்றளவும், நில அளவை வரைபடத்தில் குறிப்பிடப்படும் தகவல்கள் மக்களுக்கு புரியாத புதிராகவே பலருக்கும் உள்ளது.  பத்திரத்தில் உள்ள நிலத்தின் பக்க அளவுகளை சரி பார்ப்பதில் நிலஅளவை வரைபடம் மிகமுக்கிய ஆவணமாக உள்ளது.  ஒரு எப்.எம்.பி., யில், நிலத்தின் சர்வே எண், உட்பிரிவுஎண், பக்க அளவுகள், பரப்பளவு, அக்கம் பக்கத்து சர்வே எண்கள் ஆகிய விபரங்கள் இருக்கும்.
நீங்கள் வாங்கும் நிலத்துக்கான நில அளவை வரைபடத்தில் எல்லை கோடுகள் என்னவாக குறிப்பிடப்பட்டுள்ளன என்பதை சர்வேயர்கள் உதவியுடன் கேட்டு தெளிவு பெற வேண்டும்.  இத்தகவல் தொழில்நுட்ப ரீதியாக, எப் மற்றும் ஜி என்ற ஆங்கில எழுத்துக்களால் குறிப்பிடப்படுகின்றன.
எப்.எம்.பி., எனப்படும் நில அளவை வரைபடத்தில் நிலத்தில் நீளம், அகலம் ஆகியவை மீட்டரிலேயே குறிப்பிடுவது வழக்கமாக உள்ளது. அதே நேரம், பரப்பளவை பொருத்தமட்டில், ஏக்கர், ஏர், எக்டேர் போன்ற அளவுகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
நீங்கள் வாங்கும் சொத்துக்கான பட்டாவில் உள்ள அளவுகள் பத்திரத்துடன் முழுமையாக ஒத்து போனாலும், நில அளவை வரைபட விபரங்களுடன் ஒத்து போகிறதா என்றும் பாருங்கள்.

பல இடங்களில் பட்டாவில் உள்ள விபரம் தவறாக இருக்கும் நிலையில் முந்தைய நில அளவை வரைபடங்கள் வாயிலாக மட்டுமே உண்மையை அறிய முடியும் நிலை ஏற்படுகிறது என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.


No comments:

Post a Comment

Bigger the house, bigger the responsibilities

  Here is a look at the aftermath of upgrading to a larger space Regardless of the size of the current home, many homeowners often nurture t...