Monday, September 23, 2024

அக்கம் பக்கத்து விலை நிலவரம் அறியாமல் வீடு, மனை வாங்காதீர்!

 அக்கம் பக்கத்து விலை நிலவரம் அறியாமல் வீடு, மனை வாங்காதீர்!
சொந்தமாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று திட்டமிடும் நிலையில் அதற்கான ஆவணங்கள் ரீதியான விஷயங்களுக்கு அப்பால் விலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.  ஒரு சொத்துக்கு அதன் உரிமையாளர் சொல்லும் விலை எதன் அடிப்படையில் கணக்கிடப்பட்டது என்பதை கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும்.

நீங்கள் ஒரு கட்டுமான நிறுவனத்தின் குடியிருப்பு திட்டத்தில் புதிய வீட்டை வாங்குவதாக இருந்தால், அதில் தெரிவிக்கப்படும் விலையின் உள்ளடக்கம் என்ன என்று கேட்க வேண்டும், நிலத்துக்கான விலை என்ன, கட்டுமான பணிக்கான செலவு என்ன என்பதை தெளிவாக விசாரிப்பது அவசியம்.

அடுக்குமாடி திட்டங்களில் வீடு வாங்கும் போது நிலத்தின் விலைக்கும், கட்டடத்தின் மதிப்புக்கும் இடையிலான வேறுபாடு, 10 முதல், 20 சதவீதம் தான் இருக்கும். அதே நேரத்தில் பழைய அடுக்குமாடி திட்டத்தில் விற்பனைக்கு வரும் வீட்டுக்கு விலை எனும் போது, நிலத்தின் மதிப்பு அதிகரித்தும், கட்டட மதிப்பு குறைந்தும் இருக்கும்.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் அடுக்குமாடி திட்டத்தில் வீடு வாங்கும் போது, அதில் நிலத்துக்கான விலையாக குறிப்பிடப்படும் தொகை என்ன என்று பாருங்கள், அந்த பகுதியில் தற்போது நிலத்தின் விற்பனை விலை என்ன, சந்தை மதிப்பு, வழிகாட்டி மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும்.
இத்துடன் நிற்காமல், அப்பகுதியில் அக்கம் பக்கத்தில் நிலம், வீடு விற்பனை செய்யப்படும் நிலையில் அதன் விலை குறித்தும் விசாரிக்க வேண்டியது அவசியம். அதே போன்று, பழைய வீடு விற்கும் நிலையிலும், அப்பகுதியின் நிலத்தின் மதிப்பு என்ன என்று விசாரிப்பது அவசியம். இது போன்ற விசாரணையில் தெரியவரும் தகவல்கள் அடிப்படையில் தான் விற்பனையாளர் சொல்லும் விலையின் உண்மை தன்மையை சரி பார்க்க வேண்டும். சில இடங்களில் சம்பந்தம் இல்லாத வகையில் விலை அதிகமாகவும், மிக குறைவாகவும் இருந்தால் அது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்.


அக்கம்பக்கத்து நிலவரத்துக்கு சம்பந்தம் இல்லாத வகையில் விலை குறிப்பிடப்படும் நிலையில், சொத்து வாங்குவோர் கவனமாக செயல்பட வேண்டும். நீங்கள் வீடு வாங்கும் திட்டத்தில் வீடுகளுக்கான நிலத்தின் பிரிபடாத பங்கு அளவுக்கு தான் நிலத்தின் மதிப்பு சேர்க்கப்பட வேண்டும்.

வாகன நிறுத்துமிடம் போன்ற விஷயங்களுக்கு சதுர அடி அடிப்படையில் பணம் வசூலிக்க கூடாது, வாகன நிறுத்துமிடத்துக்கான கட்டணத்தை விலையுடன் சேர்த்து வசூலிப்பதற்கு சட்டப்பூர்வமாக எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்பதை புரிந்து செயல்படுங்கள்.


சொத்து வாங்கும் போது அதன் விலை தொடர்பான விஷயங்களை ஒன்றுக்கு பலமுறை தெளிவாக விசாரிக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர்கள்.


No comments:

Post a Comment

Virtual home tours beyond ease and convenience

  Virtual home tours beyond ease and convenience Digital tours are also contributing to a greener planet by minimising the number of resourc...