பட்டா மாறுதல் விஷயத்தில் மக்கள் கவனம் செலுத்த துவங்கியிருப்பது நல்ல விஷயம் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால், தனியாக நிலம் அல்லது வீடு வாங்குவோர் மட்டும் தான் பட்டா மாறுதல் விஷயங்களில் கவனம் செலுத்துகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் வீடு வாங்கும் நபர்கள் பட்டா தொடர்பான விஷயங்களில் உரிய கவனம் செலுத்துவதில்லை.
இதனால், பெரும்பாலான பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களின் பட்டா, அதன் பழைய உரிமையாளர் பெயரிலேயே தொடர்கிறது.
இதில் குறிப்பிட்ட சில விஷயங்களில் மக்கள் காட்டும் அலட்சியம் நடைமுறை ரீதியாக பல்வேறு புதிய சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.
இன்றைய சூழலில், பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள், தங்கள் பெயரில் நிலத்தை கிரையம் பெறுவதில்லை என்பதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களின் நிலங்களை ஒருங்கிணைத்து தான் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இத்திட்டங்களுக்கான நிலங்களை ஒருங்கிணைக்கும் நிலையில் அதன் பழைய உரிமையாளர்களிடம் இருந்து பொது அதிகாரத்தை மட்டுமே கட்டுமான நிறுவனங்கள் பெறுகின்றன. இந்த பொது அதிகாரத்தின் அடிப்படையிலேயே கட்டுமான பணிகளை முடித்து வீடுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இது போன்ற திட்டங்களில் வீடு வாங்குவோர் தங்களுக்கான வீட்டின் பரப்பளவு என்ன, நிலத்தின் பிரிபடாத பங்கான யுடிஎஸ் எவ்வளவு என்பதில் தான் கவனம் செலுத்துகின்றனர்.
தனக்கான கிரைய பத்திரத்தில் யுடிஎஸ் அளவு சரியாக குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதுடன் மக்களின் சரி பார்ப்பு முடிந்து விடுகிறது.
நீங்கள் வாங்கும் வீட்டுக்கு ஒதுக்கப்படும் யுடிஎஸ் பரப்பளவு பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால் மட்டுமே அது உங்களுக்கு உரிமையானதாக மாறிவிடாது என்பதை மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். அந்த யுடிஎஸ் பரப்பளவுக்கு நீங்கள் முழுமையான உரிமையாளர் ஆக வேண்டும் என்றால் பட்டா மாற்றம் நடக்க வேண்டும்.
தனியாக வீடு, மனைகளுக்கு மட்டும் தான் பட்டா வழங்கப்படும், அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களுக்கு பட்டா வழங்கப்படுகிறதா என்பதே பலருக்கும் குழப்பமாக உள்ளது.
இதனால், பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்பு திட்ட நிலங்கள் சம்பந்தமே இல்லாமல் பழைய உரிமையாளர்கள் பெயரில் தொடர்கின்றன.
இதில் அடுக்குமாடி திட்டங்களில் வீடு வாங்குவோர் கூட்டாக தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தால், யுடிஎஸ் பாகத்துக்கான பட்டா வாங்க முடியும்.
கூட்டு பட்டா அல்லது தனி பட்டா என்ற அடிப்படையில் தங்களுக்கான யுடிஎஸ் பாகத்துக்கான பட்டாவை மக்கள் பெற முடியும்.
அடுக்குமாடி திட்டங்களில் வீடு வாங்குவோர் இது விஷயத்தில் உரிய கவனம் செலுத்தினால், எதிர்காலத்தில் அந்த நிலத்தை வேறு நிறுவனம் வாயிலாக மேம்படுத்தும் நிலையில் பிரச்னைகளை தவிர்க்கலாம் என்கின்றனர் வருவாய் துறை அதிகாரிகள்.
No comments:
Post a Comment