Saturday, September 28, 2024

தரமான யுபிவிசி ஜன்னல்களை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் !

 
புதிதாக வீடு கட்டுபவர்கள் அடிப்படை கட்டுமான பணிகள் முடியும் நிலையில் தான் ஜன்னல்கள் அமைப்பது தொடர்பாக கவனம் செலுத்துகின்றனர்.  இதில் வீட்டுக்கான வரைபடம் தயாரிக்கும் நிலையிலேயே ஜன்னல்கள் அமையும் இடம், அளவுகள் ஆகியவற்றை முடிவு செய்ய வேண்டும்.
 
குறிப்பாக, வீட்டில் பிரதான கதவு எந்த பக்கம் அமையும் என்று பார்த்து அதற்கு ஏற்ற வகையில் காற்றோட்டத்தை கணக்கிட்டு ஜன்னல்களை அமைக்க வேண்டும்.  அப்போது தான் வெளியில் வரும் காற்று முறையாக வெளியேறுவதற்கு வழி கிடைக்கும்.

இதில் ஜன்னல்களுக்கு கம்பிகள் அமைத்து, மரம் அல்லது கண்ணாடி கதவுகள் அமைப்பதே வழக்கமான நடைமுறையாக இருந்து வந்தது.  இந்நிலையில், பிவிசி, யுபிவிசி என புதிய வகை பொருட்கள் வருகையால் ஜன்னல்கள் அமைப்பது தற்போது எளிதாக உள்ளது.

வீடுகளில் மரத்தால் ஜன்னல்கள் அமைப்பதை விட, யுபிவிசி முறையில் ஜன்னல்கள் அமைக்கும் போது ஓரங்களில் தேவையில்லாத இடைவெளி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  கட்டுமான நிலையிலேயே ஜன்னல்கள் பிரேம்களுக்கான அளவு எடுக்கும் பணிகளை முடிக்க வேண்டும்.

பூச்சு வேலை முடிந்த நிலையில் ஜன்னல் பிரேம்களை பொருத்தினால், ஓரங்களில் இடைவெளி இருந்தாலும் அதை அடைத்து சரி செய்ய முடியும்.

குறிப்பாக, பழைய வீட்டில் மர ஜன்னலை அகற்றிவிட்டு, யுபிவிசி ஜன்னல் அமைக்கும் நிலையில் ஓரங்கள் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மரம் அல்லது இரும்பு பிரேம்களால் தயாரிக்கப்பட்ட ஜன்னல்கள் அமைக்கப்பட்ட இடங்களில் தற்போது, அதை அகற்றிவிட்டு, யுபிவிசி ஜன்னல் அமைக்க மக்கள் விரும்புகின்றனர்.

அழகிய தோற்றம் மட்டுமல்லாது, பயன்படுத்துவதற்கும் எளிதாக இருப்பதால் யுபிவிசி ஜன்னல்களை அமைக்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இது போன்று, உங்கள் வீட்டில் யுபிவிசி ஜன்னல்கள் அமைக்க நீங்கள் திட்டமிட்டால் அதற்கான இடத்தை தயார் செய்வதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

ஜன்னல்களுக்கான கதவுகள் எந்த பக்கம் திறக்கப்பட வேண்டும் என்பதையும், அதில் பாதுகாப்பு காரணங்களையும் கவனிக்க வேண்டும்.

வீட்டின் வெளிப்புறத்தில் காலியிடம் இல்லாத நிலையில் உட்புறமாக திறந்து மூடும் வகையில் ஜன்னல்களை அமைப்பது நல்லது.  பயன்பாட்டு நிலையில் பிரச்னை ஏற்படும் என்று தெரிந்தால் ஸ்லைடிங் முறையில் திறக்கும் அமைப்புகளை தேர்வு செய்யலாம்.

யுபிவிசி ஜன்னல்களை வாங்கும் போது, விலை மலிவாக கிடைக்கிறது என்பதற்காக தரமில்லாத தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்தினால், அது உடல் நல பாதிப்புகளுக்கு வழிவகுத்துவிடும்.

எனவே, நீங்கள் என்ன வகை யுபிவிசி ஜன்னல்களை யாரிடம் இருந்து வாங்குவது என்பதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

கட்டுமான ஒப்பந்ததாரர் பார்த்துக்கொள்வார் என்று அலட்சியம் காட்டாமல் உரிமையாளர் இதில் நேரடியாக தலையிட வேண்டும்.

இவ்வகை ஜன்னல்களில், கண்ணாடிகள் அமைப்பது தொடர்பான விஷயங்களிலும் மிக மிக கவனமாக செயல்பட வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

No comments:

Post a Comment

மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு

  மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு 'சென்னை பெருநகர் பகுதிக்கான மூன்றாவது முழுமை திட்டத்துக்காக, 28 தலைப்ப...