Saturday, August 24, 2024

வீட்டுவசதி கண்காட்சிகளுக்கு செல்வோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

வீட்டுவசதி கண்காட்சிகளுக்கு செல்வோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

இன்றைய சூழலில் ஆன்லைன் முறையில் பல்வேறு வசதிகள் கிடைத்தாலும் நேரில் சென்று விசாரித்து வாங்குவதில் மக்களுக்கு தனியான விருப்பம் தொடர்கிறது. இந்த வகையில் கொரோனா மற்றும் ஊரடங்கு காலத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தங்கள் திட்டங்கள் குறித்த விபரங்களை பொதுமக்கள் ஆன்லைன் முறையில் அறிய ஏற்பாடு செய்தன. 


அப்போது பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாது என்பதால், வீட்டில் இருந்தபடியே இந்த விபரங்களை பெறுவதற்கு இது உதவியாக இருந்தது. ஆனால், தற்போது அனைவரும் இயல்பு நிலைக்கு வந்த சூழலில், நேரில் சென்று விசாரிப்பதில்மக்கள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.


குறிப்பாக, வீடு, மனை வாங்குவது தொடர்பான விஷயங்களில் சம்பந்தப்பட்ட திட்டப்பகுதிகளுக்கு நேரில் சென்று விசாரிப்பது அவசியமாகிறது. இதற்கு பல்வேறு நிறுவனங்கள் மக்களை நேரில் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்வதும் சமீப காலமாக அதிகரித்துள்ளது.


இந்நிலையில், சென்னை உள்ளிட்ட நகரங்களில், பல்வேறு கட்டுமான நிறுவனங்கள் தங்கள் திட்டங்களின் விபரங்களை ஒரே இடத்தில் காட்சிப்படுத்தும் வகையில் கண்காட்சிகளை நடத்துகின்றன. ஒரே இடத்தில் அனைத்து நிறுவனங்களின் திட்டங்களையும் அறிய பொதுமக்களுக்கு இது பேருதவியாக உள்ளது.


இதில் மக்களின் வசதிக்காக கட்டுமான நிறுவனங்கள் கூடுதலாக சில சிறப்பு வசதிகளையும் ஏற்படுத்துகின்றன. தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளுடன் பேசி, வீட்டுவசதி கண்காட்சி நடக்கும் இடங்களில் வீட்டுக்கடன் வழங்குவதற்கான அரங்குகளும் அமைக்கப்படுகின்றன. இதுபோன்ற கண்காட்சிகள் தற்போது பரவலாக அதிகரித்துள்ள நிலையில், இதை பயன்படுத்துவதில் பொதுமக்கள் சில விஷயங்களில் தெளிவாக இருக்க வேண்டும்.


வீடு அல்லது மனை வாங்குவதா என்பதை முதலில் தெளிவுபடுத்திக்கொண்டு அதன் அடிப்படையில் உங்கள் தேடல் இருக்க வேண்டும். சூழல் அடிப்படையில் இறுதிக் கட்டத்தில் முடிவுகளில் மாற்றம் வருவது என்பது இயற்கை தான் என்றாலும், மக்கள், தேடல் நிலையில் தெளிவாக இருக்க வேண்டும்.


வீடு வாங்குவது என்று முடிவு செய்துவிட்டால், உங்கள் பட்ஜெட் என்ன, எந்த பகுதி என்பதை முடிவு செய்து அதற்கு ஏற்ற திட்டங்களின் விபரங்களை சேகரிக்க வேண்டும். வீட்டுவசதி கண்காட்சிக்கு செல்லும்முன் இதுபோன்ற அடிப்படை விஷயங்கள் குறித்த விபரங்களை குறிப்பாக எழுதி வைத்துக்கொள்வதும் நல்லது. குறிப்பாக, இக்கண்காட்சிக்கு செல்லும்முன் உங்கள் ஆதார் எண், பான் எண் உள்ளிட்ட விபரங்களை உடன் வைத்து இருப்பது நல்லது.


இங்கு வீட்டுக்கடன் வழங்கும் மையங்களில் சில அடிப்படை தகவல்களை அளித்தால் போதும், உங்களுக்கு எவ்வளவு தொகை வீட்டுக்கடனாக கிடைக்கும் என்பது முடிவு செய்யப்படும். திட்டங்கள், நிறுவனங்கள் குறித்த விபரங்களை சேகரிப்பதுடன், அங்குள்ள பிரதிநிதி களுடன் பேசி கூடுதல் விபரங்களை பெறலாம் என்கின்றனர் கட்டுமானத் துறை வல்லுனர்கள். 

No comments:

Post a Comment

மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு

  மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு 'சென்னை பெருநகர் பகுதிக்கான மூன்றாவது முழுமை திட்டத்துக்காக, 28 தலைப்ப...