சொத்தின் நகல் பத்திரம் பெறுவதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
ஒரு சொத்தை விலைக்கு வாங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவோர், அது தொடர்பான அனைத்து பத்திரங்களையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். இதில், உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள அனைத்து பத்திரங்களின் பிரதிகளையும் முறையாக கொடுப்பர் என்று எதிர்பார்க்க முடியாது.சில சமயங்களில் சொத்தை விற்கும் உரிமையாளர்கள் தங்கள் பெயருக்கு வந்த கிரைய பத்திரத்தின் அசல் பிரதி மட்டும் வைத்து இருப்பர். அதற்கு முந்தைய பத்திரத்தின் நகல் மட்டும் இருக்கும், அசல் பத்திரம் இல்லை என்பதற்கு பல்வேறு காரணங்களை சொல்வர்.
இது போன்ற சூழலில், முந்தைய பத்திரங்களின் அசலில் என்ன விபரங்கள் உள்ளன, விற்பனையாளர் காட்டும் நகல் பத்திரங்கள் உண்மை தானா என்று பார்க்க வேண்டும். இதற்கு, அந்த குறிப்பிட்ட பத்திரத்தின் எண், பதிவு செய்த ஆண்டு, சார்-பதிவாளர் அலுவலகம் ஆகிய விபரங்கள் இருந்தால் போதும்.
இந்த அடிப்படை விபரங்களை அளித்து உரிய முறையில் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட பத்திரங்களின் பிரதிகள் உங்களுக்கு கிடைத்துவிடும்.
தற்போது, சொத்தின் நகல் பத்திரங்கள் பெற வேண்டுமானால், சார்-பதிவாளர் அலுவலகம் கூட செல்ல வேண்டியதில்லை.
நீங்கள் வீட்டில் இருந்தபடியே இணையதளம் வாயிலாக நகல் பத்திரங்கள் கோரி விண்ணப்பிக்கலாம். இதிலும், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, 1975 முதல் தற்போது வரை பதிவான பத்திரங்களின் பிரதியை மட்டுமே பெற முடியும் என்ற நிலை இருந்தது. இது தற்போது, 1865 முதல் பதிவான பத்திரங்களின் நகல் கிடைக்கும் அளவுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் முறையில் பத்திர நகல் கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், ஆவண எழுத்தர்கள் வாயிலாக அல்லது நீங்களே உங்கள் பெயரில் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான பணியில் இறங்கும் முன் ஆதார் எண், இ-மெயில் முகவரி,மொபைல் போன் எண் ஆகிய விபரங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.
ஒரு சொத்து பத்திரத்தின் நகல் வேண்டும் என்று தேவை எழுந்தால், பதிவுத்துறையில் முறையாக விண்ணப்பித்தால் ஓரிரு நாட்களில் அது உங்களுக்கு இ-மெயில் வாயிலாக அனுப்பப்படும். இதை வைத்து அந்த சொத்தை வாங்குவது தொடர்பான விஷயங்களில் அடுத்தடுத்த முடிவுகளை எடுக்கலாம்.
குறிப்பாக, ஒரு சொத்தின் நகல் பத்திரம் பெறும் நிலையில் அதை முறையாக பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கிறதா என்று பாருங்கள்.
வில்லங்கம் மட்டும் பார்க்க வேண்டும் என்றால், பதிவு குறித்த அடிப்படை தகவல்கள் போதும் என்ற நிலையில் பத்திர நகல் தேவைப்படாது.
நீங்கள் வாங்கிய சொத்தின் முந்தைய அசல் பத்திரங்கள் வேண்டுமென்றே மறைக்கப்படுகிறது என்று தோன்றும் நிலையில், நீங்கள் நகல் பிரதியை வாங்கி பார்ப்பது நல்லது என்கின்றனர் ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர்கள்.
No comments:
Post a Comment