வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சொத்துக்களை விற்பதில் கவனிக்க வேண்டியவை!
புதிதாக, வீடு, மனை வாங்குவது போன்று இருக்கும் சொத்துக்களை விற்பதிலும், மக்கள் கவனமாக இருக்க வேண்டும். வாங்கும்போது மட்டும் நாம் ஏமாறுவதில்லை. நம் சொத்தை பிறருக்கு விற்கும் போதும் நாம் ஏமாற வாய்ப்பு இருக்கிறது. ஆனால், நம்மிடம் உள்ள சொத்து நல்ல விலைக்கு விற்கப்பட வேண்டும் என்பது தான், அனைவரின் அடிப்படை நோக்கமாக இருக்கும்.
அப்படி ஒரு நிலையில் நாம் இருக்கும் போது, விற்கும் சொத்தை வாங்கும் நிலையில் உள்ளவர்களின் முழு வரலாற்றையும் நாம் தெரிந்துக் கொள்வது மிக அவசியம்.
தவறான, சட்டத்துக்கு மாறான வழியில் யாரும் செல்ல கூடாது. குறிப்பாக, அதிக விலை கிடைக்கிறதே என்பதற்காக, தவறான நபர்களுக்கு சொத்தை விற்க கூடாது. நம்மில் சிலர் சந்தை மதிப்பை விட, கூடுதல் விலை கிடைக்கிறது என்பதற்காக, சொத்தை விற்க முனைவர்.
அதில், எந்த வில்லங்கம் வந்தாலும், விற்றவரின் மீதும் புகார் வரவே செய்யும். உங்கள் சொத்தை யார் வாங்க வருகின்றனர் என்பதில், கவனமாக இருக்க வேண்டும். தெரிந்தவர், உள்ளூர்க்காரர் என்றால், அதில் பெரிய பிரச்னை இருக்காது. அவரின் முழு வரலாறும் நமக்கோ, நம் உறவினர்களுக்கோ தெரிந்திருக்கும். ஆனால், முன்பின் அறிமுகம் இல்லாத நபர்கள் எனில், அவர்கள் யார் என்பது தொடர்பான விபரங்களை விசாரிப்பது நல்லது.
குறிப்பாக, அரசு வழங்கிய அடையாள ஆவணங்கள் ஏதாவது உள்ளதா என்பதை கேட்டு வாங்கி பார்த்துக் கொள்வது நல்லது.
சொத்தை வாங்க வருவோரிடம், எடுத்த எடுப்பிலேயே அடையாள ஆவணம் கேட்பது நடைமுறையில் சில சங்கடங்களை ஏற்படுத்தும். பேச்சு வாக்கில் அவர் தொடர்பான விஷயங்களை விசாரித்து விட்டு, விற்பனை ஒப்பந்தம் எழுதும் நிலையில், அடையாள ஆவணங்களை கேட்கலாம்.
இதில், வெளிநாடுவாழ் இந்தியர்கள் எனில் கூடுதல் விசாரணை தேவை. அரசு இது தொடர்பாக பிறப்பித்துள்ள உத்தரவுகள் குறித்து சொத்து விற்பவர் அறிந்து இருக்க வேண்டியது அவசியம். வெளிநாடுவாழ் இந்தியர்கள் இங்கு சொத்துக்களை வாங்கவும், விற்கவும் முடியும். இவ்வாறு, இந்தியாவில் சொத்து வாங்க அவர்களுக்கு சில நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது.
சொத்துக்களை வாங்க விரும்புவோர், இந்திய குடியுரிமையை இழக்காமல் இருக்க வேண்டும். சொத்து வாங்க முதலீடு செய்யும் பணத்துக்கான கணக்கை அவர் அளிக்க வேண்டும். வெளிநாடுகளில் முறையாக வேலை அல்லது தொழில் செய்து சம்பாதித்த பணத்தில் இந்தியாவில், வீடு, மனை வாங்குவது பிரச்னை இல்லை. ஆனால், சட்ட விரோத பண பரிமாற்றம் வாயிலாக சொத்து வாங்குவோர் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகின்றனர். எனவே, அசையா சொத்துக்களை வசதி படைத்த வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு விற்பவர்கள் இது போன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் பதிவுத்துறை அதிகாரிகள்.
No comments:
Post a Comment