Wednesday, November 22, 2023

காணாமல் போன நபரின் நிலத்தை ஆக்கிரமித்தவர் பட்டா பெற முடியுமா?

 காணாமல் போன நபரின் நிலத்தை ஆக்கிரமித்தவர் பட்டா பெற முடியுமா?
அரசு துறைகள் பயன்படுத்தாத நிலத்தை ஆக்கிரமித்து வசித்து வருவோருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.  இதே போன்று நத்தம் புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கும் பட்டா வழங்கப்படுகிறது.

                பட்டா ஒரு நிலத்தின் உரிமையை சுட்டிக் காட்டும் ஆவணம்.  இந்த ஆவணத்தை வருவாய் துறை வழங்குகிறது.  தமிழகத்தில், பட்டா வழங்குவது மற்றும் மாற்றத்துக்கு ஒன்லைன் வழியே விண்ணப்பிக்க வழி செய்யப்பட்டிருக்கிறது.


               இதில், யாரும் உரிமை கோராத நிலங்களை மக்கள் தங்கள் நிலையில் அதை புறம்போக்கு நிலமாக கருதி ஆக்கிரமிக்கின்றனர்.  இத்தகைய ஆக்கிரமிப்புகளுக்கு பட்டா கோரும் நிலையில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன.


                அரசு துறைகளுக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பாளர்கள் பட்டா கோருவது எளிதல்ல.  இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.


               தனியார் பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ள நிலத்தை, அவர் தலையீடு இன்றி வேறு ஒருவர் தொடர்ந்து, 12 ஆண்டுகள் அந்த நிலத்தை எவ்வித வாடகையும் செலுத்தாமல் பயன்படுத்தி வந்ததற்கான ஆதாரத்தை அளிக்க வேண்டும்.


               இத்துடன், அந்த நிலத்துக்கான வரிகளை ஆக்கிரமிப்பாளர் செலுத்தி இருந்தால், அதற்கான ஆதாரங்களையும் அளிக்க வேண்டும்.  இத்தகைய சூழலில், வருவாய் ஆவணங்கள் அடிப்படையில், பட்டாதாரர் கண்டுபிடிக்கப்பட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.


              அவர் தரப்பில் இருந்து எவ்வித ஆட்சேபனையும் வராத நிலையில், ஆக்கிரமிப்பாளர் பெயருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.  இதில், உண்மையான பட்டாதாரர் காணாமல் போய் விட்டார், அவர் எங்கு எப்படி இருக்கிறார் என்பது தெரியாத நிலையில் ஆக்கிரமிப்பாளர்கள் பட்டா கோர முடியும்.

       

               இந்த நிலையில், உரிமையாளர் எங்கு இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை என்பதை தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும்.  இது போன்ற சூழலில், அந்த நிலத்துக்கு சட்டபூர்வமாக  பட்டாதாரர் உரிமை கோரவில்லை என்பதை ஆதாரத்துடன் நிரூபித்தால் ஆக்கிரமிப்பாளர்கள் பட்டா பெற முடியும்.


                இது போன்ற சூழலில் பட்டதாரர் தன் கருத்தை தெரிவிக்க, சட்ட ரீதியான வாய்ப்புகளை வருவாய் துறை அளிக்கும்.  இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி, அவர் ஆட்சேபனையை தெரிவிக்காத நிலையில், ஆக்கிரமிப்பாளர்கள் பெயருக்கு பட்டா வழங்கப்படும்.


               தங்களின் பூர்வீக நிலங்களை அதற்கென்று நேரம் ஒதுக்கி, அதை பார்வையிட்டு, வீட்டில் இருக்கும் ஆவணங்களை நிதானமாக படித்து பார்த்து, கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் வட்ட அலுவலகம் சென்று தேவையான குறிப்புகளை பெற்று பிழைகள் ஏதாவது இருக்கின்றதா என்று சோதித்து அதில் ஏதாவது சிக்கல்கள் இருந்தால், அதை பற்றி மனு செய்தல் தொடர்ச்சியான அழுத்தம் மூலமாக அரசு எந்திரத்தை பின் தொடர்தல், போன்றவற்றை செய்வதன் மூலம் அதை சரி செய்து கொள்ளுதல் வேண்டும். 


              ஆனால், பெரும்பாலான நபர்களுக்கு விழிப்புணர்வு இருப்பதில்லை அல்லது அதற்கு கவனமும் கொடுப்பது இல்லை.


              சில சமயங்களில் குறிப்பிட்ட நிலத்துக்கு யாரும் உரிமை கோரவில்லை என்பதை நீதிமன்ற உத்தரவு வாயிலாக நிரூபித்தும் ஆக்கிரமிப்பாளர்கள் பட்டா பெற முயற்சிப்பர்.  எனவே, நிலம் வாங்கி வைத்துள்ளவர்கள் அதன் மீதான உரிமையை உறுதி செய்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்கின்றனர் வருவாய் துறை அதிகாரிகள்.

No comments:

Post a Comment

மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு

  மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு 'சென்னை பெருநகர் பகுதிக்கான மூன்றாவது முழுமை திட்டத்துக்காக, 28 தலைப்ப...