பொதுவாக, வீடுகளில் பொருட்களை அடுக்க அலமாரிகள், பரண்கள் அமைப்பது வழக்கமாக உள்ளது. வீட்டின் தரையில் பொருட்கள் குவிவதை தவிர்க்க பரண்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தனி வீடுகளில் ஒவ்வொரு அறையிலும் பரண்கள் அமைப்பது பலருக்கும் விருப்பமான ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதில் பரண்களுக்கான முக்கியத்துவம் குறைந்துள்ளது.
ஏனெனில், தற்போதைய சூழலில், பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புகள் உயரம் குறைத்து கட்டப்படுகின்றன. இவ்வாறு, தரையில் இருந்து மேல் தளத்துக்கான உயரம் குறையும் நிலையில், பரண்கள் அமைப்பதில் சிக்கல் ஏற்படும்.
பொதுவான வரையறைகளின் அடிப்படையில் ஒரு கட்டடத்தில் பரண் அமைக்க வேண்டுமானால், அதன் அகலம், சுவரில் இருந்து 1.5 அடி வரை இருந்தால் போதும். ஆனால், பலரும் 2 அடி வரை அகலத்தை அதிகப்படுத்துகின்றனர்.
வீட்டில் தேவையற்றவை என வகைப்படுத்தப்படும் அனைத்து பொருட்களையும் பரணில் கிடத்துவது பலருக்கு வாடிக்கையாக உள்ளது. இதில், பரணில் ஒரு பொருளை போடும் முன் அது உண்மையிலேயே எதிர்காலத்தில் தேவைப்படுமா என்று பார்க்க வேண்டும்.
அப்படி, எதிர்காலத்தில் உண்மையாக தேவைப்படும் என்ற நிலையில் உள்ள பொருட்களை மட்டுமே பரணில் வைப்பது நல்லது. மேலும், பெரும்பாலான வீடுகளில் பரணுக்கு கதவு அமைக்கின்றனர். இந்த கதவு வெளிப்புறமாக திறக்கும் வகையில் இருப்பது நல்லதல்ல. பரணின் கதவு வெளிப்புறமாக திறக்கும் விதத்தில் இருந்தால் அது மின்விசிறி பயன்பாட்டுக்கு சிக்கலை ஏற்படுத்தும். அதனால், உள் அலங்கார வல்லுனர்கள் வழிகாட்டுதல்களுடன் பரண்களை அமைப்பது நல்லது.
அதற்கான கதவுகளை நகரும் முறையில் அமைப்பது அவசியம். இதில் குறிப்பாக பல்வேறு அறைகளில் பரண் அமைப்பது போன்று, குளியல் அறையில் பரண் அமைப்பது சில இடங்களுக்கு தேவையாக உள்ளது.
‘லாப்ட் டேங்க்’ முறையில் தண்ணீர் வினியோகம் நடக்கும் இடங்களில், குளியல் அறையில் பரண் இருப்பது நல்லது. கட்டுமான நிலையில் இதை கவனித்து செயல்பட்டால் பல்வேறு சிக்கல்களை தவிர்க்கலாம் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.
No comments:
Post a Comment