சொத்து பத்திரங்கள் தொலைந்த புகாரில் காவல் துறை பணிகள் என்ன?
வீடு,
மனை வாங்குவோர் அதற்கான அசல் பத்திரங்களை மிக பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த
பத்திரங்கள் உரிய காரணம் இன்றி வெளியார் பார்வைக்கு செல்வதே பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
குறிப்பாக, சொத்து பத்திரங்களை வீட்டில் எந்த இடத்தில் எப்படி வைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். அதை
ஏதாவது காரணங்களுக்காக ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு கொண்டு செல்வதில் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம்.
பேருந்துகளில் செல்லும் போதும் அல்லது ஏதாவது அலுவலகத்துக்கு எடுத்து செல்லும் போதும், பத்திரம் நம்மிடம் இருப்பதை உறுதி செய்த பின் தான் அங்கிருந்து புறப்பட வேண்டும். இப்படி
கவனமாக இருந்தும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் பத்திரங்கள் தொலைந்து விடுவதும் உண்டு.
இத்தகைய சூழலில், அது குறித்து புதிய சான்றிடப்பட்ட நகலை பெறுவது அவசியம். இதற்கு,
அசல் பத்திரம் தொலைந்தது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்.
அந்த புகாரின் அடிப்படையில் அசல் பத்திரம் தொலைந்ததை காவல் துறை உறுதி செய்ய வேண்டும். மேலும்
அதை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதையும் சான்றளிக்க வேண்டும்.
இத்தகைய நடைமுறைகளில் காவல் துறை எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கும் சில வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த
சொத்துக்கான பத்திரம் காணாமல் போய் விட்டது என்று எழுத்து பூர்வமாக கொடுக்கப்படும் புகார்களை காவல் துறை அப்படியே ஏற்காது.
முதலில் கொடுக்கப்படும் எழுத்துப்பூர்வ புகார் கடிதத்தை வாங்கிக் கொண்டு, அதன் அடிப்படையில் சில கூடுதல் விபரங்களை காவல் துறையினர் கேட்பர். சம்பந்தப்பட்ட
சொத்தின் சர்வே எண் உள்ளிட்ட விபரங்கள், வில்லங்க சான்று போன்ற ஆவணங்கள் கேட்கப்படும்.
அசல் பத்திரத்தை தொலைத்ததாக கூறும் நபர் பெயரில் அந்த சொத்து உள்ளதா என்பதை உறுதி செய்ய வில்லங்க சான்று அவசியம். அதன்
பின் அது அரசு புறம்போக்கு நிலம் அல்ல என்பதை உறுதி செய்ய பட்டா எண் உள்ளிட்ட விபரங்கள் காவல் துறைக்கு அளிக்கப் பட வேண்டும்.
இதற்கு அடுத்தபடியாக, 'நான் யாரிடமும் பத்திரத்தை அடமானம் வைக்கவில்லை, இதில் ஏதாவது பிரச்னை வந்தால் அதற்கு நானே பொறுப்பு' என்று எழுதி, கையெழுத்திட்டு நோட்டரி சான்றுடன் அளிக்க வேண்டும். இது
போன்ற விபரங்கள் கிடைத்த பின் தான் காவல்துறை அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க முடியும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நன்றி : தினமலர் கனவு இல்லம்
No comments:
Post a Comment