1) வீடு வாங்குவதென்று முடிவு செய்து விட்டால், முதலில் உங்கள் பில்டர் வைத்திருக்கும் கால அட்டவணை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை சரிபாருங்கள். பணியை ஆரம்பிப்பதற்கான சான்றிதழ், சுற்றுச்சூழல் துறையின் அனுமதி, கட்டட அனுமதி, கட்டப்படும் நிலம் யார் பெயரில் உள்ளது என்கிற தகவல் – குறிப்பாக, நிலம் பில்டரால் விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளதா? அல்லது நிலத்தின் மீது உரிமை மட்டும் பெற்றிருக்கிறாரா என்பது பற்றி தீர விசாரித்து அறியுங்கள்.
நீங்கள் சரிபார்க்க வேண்டிய ஆவணங்களின் பட்டியல்:
அ ) பத்திரம்:
முதலில் பில்டர் வைத்திருக்கும் பத்திரங்களை சரிபாருங்கள். நிலத்தின் மீது அவருக்கு உரிமை உண்டா என்பதை உறுதி செய்யுங்கள். இதனை சரிபார்க்க சிறந்த வழக்கறிஞரின் உதவியை நாடலாம். ஒரு பஞ்சாயத்தோ அல்லது ஏதேனும் உள்ளாட்சி அமைப்போ வழங்கும் ‘தடையில்லாச் சான்றிதழ்’ மட்டுமே போதுமானதல்ல என்பதை உணருங்கள்.
ஆ) விடுவிப்பு சான்றிதழ்:
மறு விற்பனை மூலம் ஒரு சொத்தை நீங்கள் வாங்குகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அந்தச் சொத்து வங்கியில் அடமானமாக வைக்கப்பட்டிருக்க வாய்ப்புண்டு. இந்நிலையில், வங்கிக்குச் சேர வேண்டிய முழுத் தொகையும் செலுத்தப்பட்டு விட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். வங்கியிலிருந்து சொத்து விடுவிக்கப்பட்டு விட்டதற்கான ‘விடுவிப்பு சான்றிதழ்’ இருக்கிறதா என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும்.
இ) வில்லங்கச் சான்றிதழ்:
மனை தொடர்பாக எந்த சட்டச் சிக்கலும் இல்லை என்பதை உறுதிப்படுத்த சார் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து வில்லங்கச் சான்றிதழைப் பெற்று சரிபார்க்கவும்.
ஈ ) நிலம் வரும் மண்டலம்:
எந்த மண்டலத்தில் மனை வருகிறது என்பதை காண வேண்டும். எல்லா இடங்களிலும் குடியிருப்பு வீடுகளைக் கட்டிவிட முடியாது. ஒரு சில பகுதி சுற்றுலா மண்டலமாக இருக்கும். சில பகுதி தொழில் மண்டலமாக இருக்கும். நாம் எதற்காக மனை வாங்குகிறோம் என்பதை மனதிற்கொண்டு அதற்கேற்ற மண்டலத்தை தேர்வு செய்ய வேண்டும்.
உ) சி.எம்.டி.ஏ. உள்ளிட்ட அனுமதி பெற வேண்டிய அனைத்து அமைப்புகளிலிருந்தும், அனுமதி பெறப்பட்டு விட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஊ) சொத்து வரி ரசீதுகள்:
மறுவிற்பனை மூலம் மனை வாங்க எண்ணுவோர், விற்பவரிடமிருந்து பழைய சொத்துவரி ரசீதுகளை பெற்றுச் சரி பார்க்க வேண்டும். இதன் மூலம் செலுத்தப்பட வேண்டிய கட்டணங்கள் அனைத்தும் கட்டப்பட்டு விட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
2) நிதி அளிக்கும் வங்கிகள் விவரம்:
பெரும்பாலான பில்டர்கள் அனைவரும் வங்கியிடமிருந்து நிதி பெற்றே கட்டடங்களைக் கட்டுகின்றனர். எனவே, நிதி அளிக்க சம்மதித்திருக்கும் வங்கி எது? கட்டடத் திட்டத்திற்கு அந்த வங்கி நிதி தருவது உறுதி தானா என்பன போன்ற கேள்விகளுக்கு உறுதியான பதிலைப் பெற வேண்டும். ஒரு கட்டுமானத் திட்டத்துக்கு நிதியளிக்க வங்கி தயங்கிக்கொண்டிருக்கிறது என்று தெரிய வந்தால், அந்த பில்டரிடமிருந்து வீடு வாங்காமல் இருப்பதே உத்தமம்.
3) மொத்த தொகையையும் கணக்கிடுங்கள்:
இடைத்தரகர் சொல்வதை அப்படியே நம்ப வேண்டாம். கார் நிறுத்துமிடம், கிளப் போன்றவற்றுக்கு தனியே கட்ட வேண்டிய கட்டணம் குறித்து எந்த இடைத்தரகரும் கூறுவது இல்லை. மேலும், சேவை வரி போன்றவை குறித்தும் தெரிவிப்பது இல்லை. இவை அனைத்தையும் தெரிந்து கொண்டு வீடு வாங்குவதற்கான மொத்தச் செலவு எவ்வளவு. அது நமக்கு கட்டுப்படியாகுமா என்பதை பற்றி கணக்கிடுங்கள்.
4) பில்டரை பற்றி விசாரியுங்கள்:
நீங்கள் யாரிடமிருந்து வீடு வாங்க இருக்கிறீர்களோ அந்த பில்டரை பற்றி தீர விசாரியுங்கள். அவர் ஏற்கனவே கட்டியிருக்கும் வீடுகள், தற்போது கட்டிக்கொண்டிருக்கும் வீடுகள் ஆகியன குறித்து விசாரித்து அறியுங்கள்.
5) வாடகையை வைத்து கணக்கிடாதீர்கள்:
பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் – வீடு வாங்கிவிட்டால், வீட்டிலிருந்து கிடைக்கும் வாடகையைக் கொண்டு மாதத் தவணையை கட்டிவிடலாம் என்று, இது தவறான நினைப்பாகும். பல சந்தர்ப்பங்களில் மொத்தச் செலவில் 2 அல்லது 3 சதவீத அளவுக்குக் கூட வாடகை வராது. எனவே, வாடகையை நம்பி மாதத் தவணையை செலுத்துவது என்ற கற்பனையிலிருந்து வெளிவர வேண்டும்.
6) சரியான திட்டம் தேவை:
ஒரு பில்டர் பல விதமான திட்டங்களைக் கொண்டிருப்பார். அதன் தன்மைகளை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கான கடனுக்கு வங்கி ஒப்புதல் தந்த உடனேயே மாதத் தவணை செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடும். சொன்ன தேதிக்குள் பில்டர் கட்டித் தராவிட்டால், முழு மாதத் தவணையையும் நீண்ட காலம் நீங்களே செலுத்த வேண்டியிருக்கும். குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டடத்தை முடித்துத் தராவிட்டால், ஒவ்வொரு மாதமும் வாடகை தருவதான திட்டத்தை, தற்போது சில பில்டர்கள் அறிவித்து வருகின்றனர். எனவே, சிறந்த திட்டத்தை தேர்ந்தெடுக்க முயல வேண்டும்.
7) வீட்டின் அளவு:
பல நேரங்களில் பில்டர்களால் குறிக்கப்படும் ‘பில்ட்–அப்’ பகுதியில் மாடிப்படிகள், லாபி போன்றவையும் சேர்த்துக் கொள்ளப்படும். உதாரணமாக 1000 ச.அடி வீடு வாங்கினால், நம் நேரடிப் பயன்பாட்டுக்கு 700 அல்லது 750 ச.அடி தான் வரும். எனவே, பயன்பாட்டுக்கு வரும் பகுதி பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அத்துடன், மண்ணின் தன்மை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.
8) வீட்டுக்கும் நகருக்குமான தொடர்பு:
நம் வீடு அமைந்துள்ள பகுதி நகரின் பிற பகுதிகளுடன் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது? ரெயில், சாலை போக்குவரத்து சேவை எளிதில் கிடைக்கும் வகையில் வீடு அமைந்துள்ளதா? மேலும், சுற்றுச்சூழலில் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு அருகில் வீடு அமையாமல் உள்ளதா என்பது பற்றி தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
9) வீட்டடி மனைகளை நேரில் காண வேண்டும்:
பொதுவாக பில்டர்களால் தரப்படும் வீட்டடி மனைகள் பற்றிய வண்ணப் புகைப்படத்தை மட்டும் சார்ந்திராமல், நேரடியாகவே சென்று மனைகளைக் காண வேண்டும். மனதுக்கு திருப்தி ஏற்பட்ட பிறகே மனை வாங்க வேண்டும்.
10) வீட்டினைப் பதிவு செய்தல்:
உங்களை சட்டப்பூர்வமான உரிமையாளராக ஆக்கிக் கொள்ளும் விதத்தில், சார் பதிவாளர் அலுவலகத்தில் வீட்டைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். வீட்டுப் பதிவு தொடர்பான பத்திரத்தை சிறந்த வழக்கறிஞரைக் கொண்டு கவனமாக எழுதிப் பதிவு செய்ய வேண்டும்.