பத்திரங்களில் குறிப்பிடப்படும் நில வகைப்பாடுகள் குறித்து அறிந்தால் குழப்பங்களை தவிர்க்கலாம்!
தமிழகத்தில் நிலங்கள் பல்வேறு தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பது பழங்காலத்து வகைப்பாடுகள்.
இதில் காலத்துக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்கள் வந்தன. குறிப்பாக,
நில நிர்வாகம் குறித்தச் சட்டங்கள் வந்த பின் நில வகைப்பாடுகளில் பல்வேறு முன்னேற்றங்கள் வந்துள்ளன.
இருப்பினும், நில வகைப்பாடுகள் பத்திரங்களில் எப்படி குறிப்பிடப்படுகின்றன என்பதில் கவனமாக இருக்க வேண்டும். நடைமுறை
ரீதியாக நிலம் தற்போது என்னவாக பயன்படுத்தப்படுகிறதோ அந்த வகைப்பாடு தான் பத்திரத்தில் இருக்க வேண்டும்.
அதே சமயம், அந்த வகைப்பாடு அரசுத் துறைகளால் அங்கீகரிக்கப்பட்டு இருக்க வேண்டும். இதில்
காலத்துக்கு ஏற்ப பயன்படுத்தப் படும் வார்த்தைகளும் மாறியுள்ளன.
குறிப்பாக, நன்னிலம், நன்செய் என குறிப்பிடப்பட்டால், அது நெல்
விளையும் நிலம் என்று புரிந்து கொள்ள வேண்டும். திருத்து,
கருஞ்செய் என்ற வார்த்தைகளும் நன்செய் நிலத்தை குறிப்பிட பயன்படுத்தப்படுகின்றன. மேலும்,
தாக்கு என்ற பெயரிலும் நெல்வயல் பகுதி குறிப்பிடப்படுகிறது. வற்புலம்,
தகர், தராய் என்ற வார்த்தைகள் மேட்டு நிலத்தை குறிக்க பயன்படுத்தப்படுகின்றன.
உழவு செய்யப்பட்ட நிலம், சேற்றுப்புழி என்றும், விதைக்குரிய நிலம் விரைக்கால் என்றும் பத்திரங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கும். நீர்
பாசனமில்லாத நிலம், காடாரம்பம் என்று குறிப்பிடப்படுகிறது.
வீடுகளில், வயல்களில் சிறு தோட்டம் அமைப்பது போன்ற குறிப்பிட்ட தேவைகளுக்காக கொல்லை என்று ஒதுக்கப்படும் நிலங்கள், படப்பு, துடவை, விதைப்புனம், முதை, பின்னை போன்ற வார்த்தைகளால் குறிப்பிடப்படும். பத்திரங்களை
படிக்கும்போது இது போன்ற வார்த்தைகள் வந்தால் புரியாமல், புரிந்தது போல் நடந்து கொள்ளாமல் விபரம் அறிவது அவசியம்.
ஆவண எழுத்தர்கள், வருவாய் துறை அதிகாரிகளை அணுகினால் இது போன்ற விஷயங்களில் தெளிவு பெறலாம். சொத்துக்கள்
அடுத்தடுத்த நிலைக்கு செல்லும் போது வகைப்பாடுகளும் மாறுகின்றன என்பதை மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் வருவாய் துறை அதிகாரிகள்.