நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை, வரைபடத்துடன் அறிவதற்கான புதிய வசதியை, பதிவுத்துறை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
தமிழகம் முழுதும் உள்ள நிலங்களுக்கு தனித்தனி சர்வே எண்கள், உட்பிரிவு எண்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த சர்வே எண் வாரியாக, நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை, பதிவுத்துறை வெளியிட்டு உள்ளது.
சீரமைப்பு
குறிப்பிட்ட சில ஆண்டுகள் இடைவெளியில், சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, நில வழிகாட்டி மதிப்புகள் சீரமைக்கப்படும். அந்த வகையில், 2012ல் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புகள், 2017, 2023ல் தேவை அடிப்படையில் திருத்தப்பட்டன.
அதன்பின், 2024 ஜூலை 1 ல் அறிவிக்கப்பட்ட நில வழிகாட்டி மதிப்புகளே தற்போது பயன்பாட்டில் உள்ளன.
இதில், தெரு, சர்வே எண் வாரியாக நிலங்களுக்கு வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தெரு மற்றும் சர்வே எண் அடிப்படையில், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கூட்டு மதிப்புகளும் தற்போது சேர்க்கப்பட்டு உள்ளன. இந்த மதிப்புகள் இதுவரை பட்டியல் வடிவிலேயே, பதிவுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டு வந்தன.
இந்நிலையில், கூகுள் வரைபட அடிப்படையில், ஒரு சர்வே எண்ணுக்கான நிலம் எங்குள்ளது என்ற விபரங்களுடன், அதற்கான வழிகாட்டி மதிப்புகளை துல்லியமாக அறிய, புதிய வசதி உருவாக்கப்படுகிறது. இதற்கான பணிகளில், பதிவுத்துறை ஈடுபட்டு உள்ளது.
கூடுதல் பயன்
இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் நிலத்தின் அளவு உள்ளிட்ட விபரங்களுடன் வழிகாட்டி மதிப்புகளை அறிந்தால், அது பொது மக்களுக்கு கூடுதல் பயனை அளிக்கும். சர்வே எண்ணுக்கான நிலம் எங்கு அமைந்துள்ளது என்பதை, மக்கள் தெரிந்து கொள்ள வழி ஏற்படும்.
இதற்காக, டி.என்.ஜி.ஐ.எஸ்., எனப்படும், தமிழக புவியிட தகவல் அமைப்புடன் இணைந்து, அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் இந்த வசதி மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment