'தமிழகத்தில் புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு, பட்டா வழங்க வெளியிடப்பட்ட புதிய விதிமுறைகளில், கோவில் வகைப்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கப்படாது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோவில்கள் பலவற்றுக்கு, நிறையப்பேர் தானமாக நிலங்களை வழங்கியுள்ளனர். இவற்றில் பெரும்பாலானவற்றுக்கு, கோவில் பெயரில் முறையாக பட்டா பெறப்பட்டுள்ளது.
சிலர் அதை நீண்டகாலமாக ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் அரசியல்வாதிகள் உதவியுடன் பட்டா பெறவும் முயற்சிக்கின்றனர்.
அதேபோல, கோவில்களுக்கு வழங்கப்பட்ட சில நிலங்கள், புறம்போக்கு நிலங்களாகவும் உள்ளன. ஹிந்து சமய அறநிலையத்துறை, வருவாய் துறை நடவடிக்கை காரணமாக, அந்த நிலங்கள், 'கோவில்' என்ற வகைபாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. அதில், வசிப்போரும் பட்டா பெற முயற்சித்து வருகின்றனர்.
கடந்த 2021ல், தமிழக அரசு, புறம்போக்கு நிலங்களில், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு, பட்டா வழங்குவதற்கான வரன்முறை திட்டத்தை அறிவித்தது.
அதில், கோவில் நிலங்களில் வசிப்போருக்கும் பட்டா கிடைக்கும் என, குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து, பலரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது, 'கோவில் நிலங்களுக்கு ஆக்கிரமிப்பாளர்கள் பெயரில் பட்டா வழங்க மாட்டோம்' என, தமிழக அரசு உறுதி அளித்தது.
இந்நிலையில், சென்னையை சுற்றியுள்ள, 'பெல்ட் ஏரியா', தமிழகத்தின் பிற பகுதிகளில், நகராட்சி, மாநகராட்சியை ஒட்டிய புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு, பட்டா வழங்கும் சிறப்பு திட்டத்தை தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. இதற்கான வழிகாட்டி விதிமுறைகளில், 'கோவில்கள், தேவாலயங்கள், வக்பு வாரியம் பெயரில் உள்ள நிலங்களில் வசிப்போருக்கு, பட்டா வழங்க முடியாது.
'அதேபோல, 'கோவில்' வகைபாட்டில் உள்ள புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கும், இந்த சிறப்பு திட்டத்தில் பட்டா வழங்கப்படாது' என, கூறப்பட்டு உள்ளது.
வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''எந்தெந்த நிலங்களுக்கு பட்டா வழங்கப்படும் என்பதை தெளிவாக தெரிவித்துள்ளோம். முந்தைய அரசாணைகளை சுட்டிக்காட்டி, கோவில் நிலங்களுக்கு பட்டா பெற முயற்சிக்கக்கூடாது என்பதற்காக, இந்த விதிமுறை தனியாக குறிப்பிடப்பட்டுள்ளது,'' என்றார்.
No comments:
Post a Comment