இன்றைய சூழலில், தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இதில் மேல் தலங்களுக்கு செல்ல லிப்ட் அமைப்பது என்பது தவிர்க்க முடியாத விஷயமாகி உள்ளதால், கட்டுமான நிறுவனங்கள் இதில் கவனம் செலுத்துகின்றன.
நீங்கள் வீடு வாங்கும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் லிப்ட் வசதி அமைக்கப்படும் என கட்டுமான நிறுவனம் தெரிவித்தாலும், அதை முறையாக செயல்படுத்தி உள்ளாரா என்று பார்க்க வேண்டும்.
கட்டுமான பணிகள் முடிந்த நிலையில், லிப்ட் அமைத்து அது செயல்படும் நிலையில் இருந்தால் போதும் என்று மக்கள் நினைக்கின்றனர். உண்மையில் லிப்ட் வசதி இருக்கிறதா, அது செயல்படுகிறதா என்ற அடிப்படை தகவல்களுடன் அமைதியாகிவிடாமல், முழுமையான ஆய்வு அவசியம். பெரும்பாலான சிறிய அளவிலான அடுக்குமாடி குடியிருப்புகளில் லிப்ட் அமைக்கப்பட்டு இருந்தாலும், அதில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன.
நீங்கள் வீடு வாங்கும் கட்டடத்தில் உள்ள லிப்ட் எப்படி அமைக்கப்பட்டுள்ளது, அதன் செயல்திறன், கொள்ளளவு என்ன என்பது போன்ற தகவல்களை விசாரிக்க வேண்டும். ஒரே சமயத்தில், குறைந்த பட்சமாக நான்கு பேர் செல்வதற்கு ஏற்ற வகையில், லிப்ட் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். திடீரென மின்சாரம் தடைபடும் போது, பேட்டரியால் இயங்கி அதில் இருப்பவர்களை பாதுகாப்பாக உரிய தளத்தில் சேர்க்க வேண்டும். இதற்கு, லிப்ட் அமைக்கும் போதே அதில் பேட்டரி பேக்கப் வசதி செய்யப்பட்டுள்ளதா என்பதை கட்டுமான நிறுவனத்திடம் விசாரிக்க வேண்டும்.
பேட்டரி பேக்கப் இல்லாவிட்டால், மின்சாரம் தடைபடும் போது, லிப்ட் அப்படியே நின்றுவிடும் நிலை ஏற்படும். இதனால், அதில் பயணிப்பவர்கள் பாதியில் சிக்கும் நிலை ஏற்படும் என்பதால், பேட்டரி பேக்கப் வசதி இருக்கிறதா என்பதில் மிக கவனமாக இருக்க வேண்டும்.
பேட்டரி பேக்கப் இல்லாத நிலையில், லிப்ட் பாதியில் நின்றால் அதை மேனுவல் முறையில் தரை தளத்துக்கு கொண்டு வர அல்லது திறக்கும் வழிமுறையை குடியிருப்பில் ஒருவராவது தெரிந்து வைத்திருக்க வேண்டும். இது விஷயத்தில் அவசரகால செயல்பாடுகளை வீடு வாங்குவோர் புரிந்துக்கொள்ள வேண்டும்.
நீங்கள் வீடு வாங்கும் கட்டடத்தில் அதிக தளங்கள் இருக்கும் நிலையில், மின்சாரம் தடைபடும் போது, லிப்ட் இயங்குவதற்காக ஜெனரேட்டர் வசதி இருப்பதும் அவசியம். வீடு கட்டப்படும் நிலையில் இதற்கான வசதியை ஏற்படுத்த வலியுறுத்த வேண்டியது அவசியம் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.
No comments:
Post a Comment