Monday, November 4, 2024

முறையான மதிப்பீடு இன்றி பழைய வீட்டை வாங்கலாமா?

 
சென்னை போன்ற நகரங்களில் புதிதாக குடியேறுவோர் முதல் முதலாக சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர்.  ஆனால், இங்குள்ள விலைவாசி நிலவரம் பல சமயங்களில் இதற்கு ஒத்துழைக்கும் வகையில் இருப்பதில்லை.

இதனால், புதிய வீடு, 50 லட்சம் ரூபாய் இருக்கும் இடத்தில், 25 லட்சம் ரூபாய்க்கு பழைய வீடு கிடைத்தால், அதை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.  ஒரு காலத்தில் பழைய வீட்டை வாங்குவதில் மக்களிடம் காணப்பட்ட தயக்கம் தற்போது எந்த சுவடும் இன்றி மறைந்துவிட்டது.

பொதுவாக பழைய வீட்டை வாங்கும் போது அது கட்டப்பட்டு எவ்வளவு ஆண்டுகளுக்குள் வாங்கலாம் என்பதில் மக்களிடம் தெளிவு இல்லை.

இன்றைய சூழலில், ஒரு நபர் பழைய வீட்டை வாங்க நினைத்தால், அதற்கு வங்கிக்கடன் பெற செல்லும் போது, வங்கி அதிகாரிகள் பல்வேறு ஆய்வுகளே மேற்கொள்கின்றனர்.

இந்த வகையில், அந்த கட்டடத்தின் உறுதித் தன்மை குறித்து கட்டட அமைப்பியல் பொறியாளர் வாயிலாக ஆய்வு செய்து அறிக்கை பெறப்படுகிறது.  வங்கிகள் இது போன்ற ஆய்வுகளை மேற்கொள்ளும் என்பதால், வீடு வாங்கும் தனி நபர்கள் இதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.

அதே போன்று, பழைய வீட்டை வாங்கும்போது குறிப்பிட்ட சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.


குறிப்பாக, ஒரு இடத்தில் பழைய வீட்டை வாங்கும் போது அதை நீங்கள் நேரடியாக குடியேறி பயன்படுத்துவதாக இருந்தால், அது உங்கள் இருப்பிட தேவையை பூர்த்தி செய்வதாக கொள்ளலாம்.

இதில் வணிக ரீதியாக உங்கள் முதலீட்டுக்கு கிடைக்கும் லாபத்தை கணக்கு பார்ப்பதில் பெரிய அவசியம் இருப்பதாக தெரியவில்லை.  ஆனால், ஏற்கனவே வீடு வைத்துள்ள நபர்கள், முதலீட்டு நோக்கத்துக்காக பழைய வீட்டை வாங்கும் போது, அதில் நீங்கள் போடும் பணத்துக்கு உரிய லாபம் எப்படி கிடைக்கும் என்பதை ஆய்வு செய்வது நல்லது.

உதாரணமாக, 10 ஆண்டுகள் கடந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பழைய வீட்டை வாங்குவதாக இருந்தால், அதில் நிலத்தின் பிரிபடாத பங்கு எனப்படும் யுடிஎஸ் எவ்வளவு என்று பாருங்கள்.  அதன் பரப்பளவில் சதுர அடிக்கு தற்போது என்ன விலை மதிப்பிடப்படுகிறது என்று பாருங்கள்.  கட்டுமான ஒப்பந்தத்தில், அந்த கட்டடத்துக்கு குறிப்பிட்ட மதிப்பில், 15 சதவீதத்தை கழித்து, மீதி தொகை எவ்வளவு என்று பாருங்கள்.  தற்போது அந்த பகுதியில் நிலத்தின் சந்தை நிலவர மதிப்பு என்ன என்று பார்த்து அதனுடன் விற்பனைக்கு வந்த சொத்தின் விலையை ஒப்பிடுங்கள்.

குறிப்பாக, அடுத்த 5 ஆண்டுகளில் அங்கு நிலத்தின் விலையில் எவ்வளவு உயர்வு ஏற்படும் என்பதை கணக்கிட வேண்டும்.

இதன் அடிப்படையில் நீங்கள் வாங்கும் வீட்டுக்கான விலையில் என்ன முன்னேற்றம் ஏற்படும் என்பதையும் கணக்கு போட்டு பார்த்தால், உங்கள் முதலீடு லாபகரமானதா என்பது தெரிந்துவிடும் என்கின்றனர் ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர்கள்.

No comments:

Post a Comment

முறையான மதிப்பீடு இன்றி பழைய வீட்டை வாங்கலாமா?

  சென்னை போன்ற நகரங்களில் புதிதாக குடியேறுவோர் முதல் முதலாக சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர்.  ஆனால், இங...