பிழை திருத்த பத்திரத்தை பதிவு செய்வதில் கவனமாக செயல்படுங்கள்!
சொத்துவாங்கும் போது அதற்கான பத்திரத்தை முறையாக பதிவு செய்வதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். இதில் சிறு எழுத்து பிழை கூட பெரிய அளவில் பிரச்னைகளை ஏற்படுத்திவிடும்.அதிலும், பதிவுக்கு செல்லும் முன் வரைவு நிலையில் பத்திரத்தை மூன்று முறையாவது படித்து தெளிவாக வேண்டும்.
ஆனால், நம்மில் பலரும், வரைவு பத்திரத்தையும் படிப்பதில்லை, பதிவான பத்திரத்தையும் படிப்பதில்லை.நீங்கள் பல லட்ச ரூபாய் கொடுத்து வாங்கும் ஒரு சொத்துக்கான பத்திரங்களை பொறுமையாக படிக்க நேரம் ஒதுக்க வேண்டியது அவசியம். இதில் தட்டச்சு நிலையில் ஏற்படும் சிறிய பிழையும் உங்களை பல நாட்களுக்கு அலைய வைக்கு வாய்ப்புள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மிக துல்லியமாக பத்திரத்தை படித்தாலும், தெரு பெயர், விற்பவரின் தந்தை பெயர், முகவரி தொடர்பான விஷயங்களில் சிறு பிழைகள் ஏற்படும். இந்த பிழைகளை கண்டுபிடிக்கும் போது அதை திருத்திக் கொள்வது நல்லது.இவ்வாறு, பத்திரத்தில் பிழைகளை திருத்த சார் - பதிவாளரை அணுகி விண்ணப்பிக்க வேண்டும்.
பிழை திருத்த பத்திரத்தை தயாரித்து பதிவுக்கு தாக்கல் செய்ய வேண்டும்.சொத்து மாறவில்லை, மதிப்பு மாறவில்லை என்ற நிலையில், பிழை திருத்த பத்திரங்களுக்கு பெயரளவுக்கான கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். ஆனால், பல இடங்களில் சொத்து மதிப்பு மாறாத நிலையிலும், முத்திரைத்தீர்வை வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் ஒரு வழக்கில் சொத்து மதிப்பு மாறாத பிழை திருத்த பத்திரங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை அமல்படுத்துவதில் பதிவுத்துறை தயக்கம் காட்டி வருகிறது.
இருப்பினும், பொது மக்கள் பிழை திருத்த பத்திரங்களை பதிய கூடுதல் கட்டணம் செலுத்தாமல் இருப்பதே நல்லது. அடாவடியாக யாராவது கட்டணம் கேட்டு வற்புறுத்தினால், அதுகுறித்து பதிவுத்துறை தலைவர் அலுவலகத்துக்கு புகார் அளிக்கலாம்.
பிழை திருத்த பத்திர விஷயத்தில் பொதுமக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம் என்கின்றனர் சார் - பதிவாளர்கள்.
No comments:
Post a Comment