சொத்து வாங்குவோர் பழைய வில்லங்க சான்றுகளை நம்புவது நல்லதல்ல
ஒரு குறிப்பிட்ட சொத்தை வாங்குவது என்று முடிவெடுக்கும் முன் முதல்கட்டமாக அதன் வில்லங்க சான்று வாங்கி பார்க்க வேண்டும். அந்த சொத்தின் முந்தைய பரிமாற்றங்கள் அதில் தெளிவாக இருக்கும்.
இதில் ஆரம்ப நிலையில் அறியாமை காரணமாக பலரும் ஏமாற்றப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஒரு வீடு அல்லது மனை பிடித்து இருந்தால் அது குறித்து விசாரிக்கும் போது, விற்பனையாளரே சில வாரங்களுக்கு முன் எடுத்தது என்று கூறி வில்லங்க சான்றிதழை காட்டுவார்.
நாமும், புதிதாக விண்ணப்பித்து வாங்குவதால் ஏற்படும் செலவை நினைத்து, விற்பவர் காட்டும் வில்லங்க சான்றிதழை ஏற்கும் நிலை ஏற்படும். இதில், கூடுதல் விழிப்புடன் மக்கள் செயல்பட வேண்டும்.
இன்றைய சூழலில், சார் - பதிவாளர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்களில் சில நபர்கள் போலி ஆவணங்கள் தயாரிக்க உதவுகின்றனர்.
இத்தகைய நபர்கள் வாயிலாக போலி வில்லங்க சான்றுகள் வருகின்றன. உண்மையாக வில்லங்கம் இருக்கும் சொத்துக்களை விற்க நினைப்போர், அது தொடர்பான ஒரு போலி வில்லங்க சான்றிதழை தயாரிக்கின்றனர். உரிமை ஆவணம் மட்டும் போலியாக வந்த நிலையில் வில்லங்க சான்றிதழும் போலியாக வரத்துவங்கிவிட்டது.
இதில், பிரச்னை உள்ள குறிப்பிட்ட சில பரிமாற்ற விபரங்களை மறைத்து, போலி வில்லங்க சான்று தயாரிக்கப்படுகிறது. இதை காண்பித்து, விற்பனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இத்தகைய போலி வில்லங்க சான்றுகளை நம்பி முன்பணம் கொடுத்தவர்கள், அது போலி என்று தெரியவரும் நிலையில் விற்பனையை நிறுத்த முடியாமல் தவிக்கின்றனர்.
முன்பணம் கொடுத்துவிட்டோமே, இப்போது மீண்டும் வேறு சொத்துக்களை தேட வேண்டுமா என்று நினைக்கின்றனர்.குறிப்பாக, அதில் வில்லங்கம் என்று மறைக்கப்பட்ட விபரங்களை தானும் மறைக்க முயல்கிறார். இது பிற்காலத்தில் எத்தகைய பிரச்னையை ஏற்படுத்தும் என்பது தெரியாமல் சொத்து வாங்குவோர் இப்படி நடந்துக்கொள்கின்றனர்.
உங்களது தேடலின் போது, ஒரு சொத்து பிடித்திருந்தால், அது குறித்த சர்வே எண் உள்ளிட்ட தகவல்களை கேட்டு பெறுங்கள். அதை வைத்து பதிவுத்துறை அலுவலகம், இணையதளம் வாயிலாக சரியான வில்லங்க சான்றிதழை வாங்க நடவடிக்கை எடுங்கள்.
உண்மையான வில்லங்க சான்று இருந்தால் தான், சொத்து குறித்த உண்மையான முன் தகவல்களை அறிய முடியும். இது விஷயத்தில் எவ்வித சமரசமும் செய்துக்கொள்ளாதீர்கள் என்கின்றனர் சார்-பதிவாளர்கள்.
No comments:
Post a Comment