நிலங்களுக்கான கூட்டு பட்டாவில் தொடரும் குழப்பங்களுக்கு தீர்வு எப்போது?
நில பரிவர்த்தனையில் பட்டா மிக முக்கிய ஆவணமாக உள்ளது என்றால், அதில் கூட்டு பட்டாவின் முக்கியத்துவம் மிக அதிகமாக உள்ளது. நில அளவையின் போது, உட்பிரிவு செய்யப்படாமல் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களின் பெயரில் உள்ள நிலங்களுக்கு கூட்டுப் பட்டா வழங்கப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட சர்வே எண் இருக்கும். அதற்கு உட்பட்ட நிலம், 10 பேருக்கு உரிமையுள்ளதாக இருக்கும். ஆனால் அந்த நிலம் தனித்தனி பாகங்களாக பங்கிடப்பட்டு இருக்காது.இதில் பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நிலங்களுக்கு கூட்டுப் பட்டா தான் பெறப்படுகிறது.
இவ்வாறு கூட்டு பட்டா பெற்றவர்கள் தொடர்ந்து அதன்படியே பயன்படுத்தி வருகின்றனர். இத்தகைய சொத்துக்களை வெளியார் வாங்குவதாக இருந்தாலும், கூட்டுப் பட்டா நடைமுறை தொடர்கிறது. அதாவது, கூட்டுப் பட்டாவில் யார் விற்கிறார் என்று பார்த்து அவர் பெயர் நீக்கப்பட்டு, புதிதாக வாங்கிய நபரின் பெயர் சேர்க்கப்படும்.
விவசாய நிலமாக இருந்தவரை கூட்டுப் பட்டா நடைமுறையின் பயன்பாட்டில் சிக்கல் இருந்திருக்காது. ஆனால், குடியிருப்பு பயன்பாட்டுக்காக நிலங்கள் பாகங்களாக பிரிக்கப்பட்ட நிலையில் கூட்டுப் பட்டா தொடரும் போது சிக்கல் எழுகிறது.
குறிப்பாக, ஒரு ஏக்கர் நிலம் பல்வேறு மனைகளாக பிரிக்கப்படும் போது, சாலைக்கு இடம் ஒதுக்க வேண்டும்.
இதற்கான நிலம், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அந்த நிலம் உள்ளாட்சியின் பெயருக்கு தான பத்திரம் வாயிலாக கொடுக்கப்பட்டு, பட்டாவில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
ஆனால், பல இடங்களில் நில ஒப்படைப்பு நடக்கும், பட்டாவில் மாற்றம் இருக்காது.இதனால், புதிதாக அதில் ஏதாவது பாகத்தை விற்பனை செய்யும் போது, பத்திர அளவுகளுக்கும், பட்டா அளவுகளுக்கு இடையே குழப்பம் ஏற்படும்.
கூட்டுப் பட்டா சொத்துக்களில் உள்ள நிலங்களை பிரிக்கும் போது யாருக்கு எவ்வளவு என்பதை அதில் தனித்தனியாக குறிப்பிட்டால் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். இப்பிரச்னையில் சட்ட ரீதியாக எழும் சிக்கல்களை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை நில அளவை மற்றும் வருவாய் துறை துவக்கி உள்ளது.
நிலங்களை விற்பனைக்கு முன்பே உட்பிரிவு செய்வதை கட்டாயப்படுத்தும் கட்டுப்பாடுகள் வரவுள்ளன. இதன் வாயிலாக கூட்டுப் பட்டா சிக்கல்களுக்கு தீர்வு ஏற்படும் என்கின்றனர் வருவாய் துறை அதிகாரிகள்.
No comments:
Post a Comment