அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது அமைதியை குலைக்கும் பிரச்னைகள்!
தனியாக நிலம் வாங்கி, வீடு கட்டி விருப்பம் போல் வாழலாம் என்று கூறினாலும், அதிலும் சில வரைமுறைகளுக்கு உட்பட்டு தான் இருக்க வேண்டும். என் வீடு, என் விருப்பம் என்ற அடிப்படையில் வரைமுறையின்றி யாரும் ஆட்டம் போட முடியாது.
தனி வீடுகள் நிலை இப்படி என்றால், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பதில் அடுத்தவர்களுக்கு தொல்லை கொடுக்காமல் இருக்க வேண்டும். நாம், நம் வசதிக்காக செய்யும் ஒரு செயல் மற்றவர்களுக்கு பாதகம் ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டியது அவசியம்.
அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு என்பது எது அதற்கான எல்லை வரையறைகள் என்ன என்பதை மக்கள் தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, பத்திரத்தில் கார்பெட் ஏரியா என்று குறிப்பிடப்பட்டு உள்ள இடம் மட்டும் தான் உங்களுக்கு சொந்தம்.
உங்கள் வீட்டுக்கான சுவர் கூட தனிப்பட்ட உரிமையாகாது என்பதை மக்கள் தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். சுவர்களுக்கு இடைப்பட்ட பகுதி மட்டுமே உங்கள் தனிப்பட்ட உரிமை என்ற வரையறைக்குள் வரும் என்பது தான் அடுக்குமாடி குடியிருப்புகளில் எதார்த்த சூழல்.
வீட்டிற்கு வெளியில் உள்ள பொது இடங்களில் அனைவருக்கும் சமமான உரிமை உள்ளது என்பதை புரிந்து செயல்பட வேண்டியது அவசியம். பொது இடத்தில் எனக்கு உரிமை உள்ளது என்று நீங்கள் தேவையில்லாத வேலையை செய்தால் அது மற்றவர்களால் ஆட்சேபிக்கப்படும்.
குறிப்பாக, செல்ல பிராணிகளை வளர்க்கிறேன் என்று, அதை பயன்படுத்தி அடுத்தவர்களுக்கு தொல்லை கொடுக்கக் கூடாது. பொது இடங்களில் செல்ல பிராணிகளை உலவ விடுவது, கழிவுகளை கொட்டுவது போன்ற வேலைகளை செய்தால் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தை பொறுப்பை ஏற்றுள்ள சங்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்.
சமீபத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் செல்ல பிராணிகளை வளர்க்கிறோம் என்று ஒருவர் அத்துமீறி நடந்ததால், நாய் கடித்து ஒரு குழந்தை பாதிக்கப்பட்டது. இது தொடர்பான புகாரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து செல்லப்பிராணியை வளர்த்தவரை சிறையில் அடைத்தது.
இதே போன்று, வாகன நிறுத்துமிடங்கள் தனித்தனியாக வரையறுக்கப்படாத வளாகங்களில், அடுத்தவர்களுக்கு தொல்லை தராமல் நடந்துக்கொள்ள வேண்டும். கார் வைத்துள்ளவர்கள் தங்களுக்குள் பேசி உரிய இடங்களை பிரச்னை இன்றி பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இதில் நடைபாதைகள், அடுத்தவர் கார்களை எடுக்க பயன்படுத்தும் வழிகள் ஆகிய இடங்களில் அத்துமீறல் நடப்பதாக புகார்கள் வருகின்றன. குறிப்பாக, கார்களை நன்றாக ஓட்ட தெரிந்தவர்களுக்கும் முறையாக நிறுத்த பழக்கம் இருக்காது. இத்தகைய நபர்கள் அடாவடியாக செயல்படும் போது அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது அமைதி பாதிக்கப்படும் என்கின்றனர் சங்க நிர்வாகிகள்.
No comments:
Post a Comment