புதிய கட்டுமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தும்போது முழு விவரம் அறிவது அவசியம்
ஒரு காலத்தில், பாரம்பரிய முறையில் கட்டடங்கள் கட்டப்பட்டன. இத்தகைய கட்டடங்கள் பல நூற்றாண்டுகளை கடந்தும் நிலைத்து நிற்கின்றன.
இந்த மாதிரியான கட்டடங்கள் கட்டப்பட்ட முறையும், கட்டுவதற்கு பயன்படுத்திய கட்டுமானப் பொருட்களும் மிக தரமானதாய் அந்தகாலக் கட்டத்தின் அதி நவீன பொருட்களாகவும் இருந்திருக்கின்றன.
இருப்பினும், புதிதாக கட்டப்படும் பெரும்பாலான கட்டடங்களில், பாரம்பரிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவது இல்லை.
நவீன தொழில்நுட்பம் என்ற பெயரில், பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதனால், கட்டடத்தின் ஆயுள் எந்த விதத்திலும் அதிகரிக்கவில்லை என்பதே உண்மை.
நீடித்து உழைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், கடைப்பிடிக்கப்பட்ட பாரம்பரிய வழிமுறைகளில் கட்டப்பட்ட கட்டடங்கள் நிலைத்து நிற்பதும், புதிய தொழில் நுட்பத்தில் கட்டப்படும் கட்டடங்கள் ஆயுள் குறைந்து இருப்பதும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.
நம் மிகப் பெரிய முக்கிய நகரங்களில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டடங்கள் நிலைத்து நிற்பதையும், 10 ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டடம் இடிந்து விழுந்ததையும் நாம் அறிந்திருக்கிறோம். இதற்கு என்ன காரணமாக இருந்திருக்கலாம் என யோசித்தால் விடை கிடைப்பது அரிது. புதிய நவீன தொழில்நுட்பங்களை மேலோட்டமாக குறை சொல்ல முடியாது.
ஆராய்ச்சி நிலையில் நல்ல நோக்கம் இருந்தாலும், இத்தொழில் நுட்பங்கள் வணிக நோக்கத்திலேயே பயன்பாட்டுக்கு வருகின்றன.
இதில், புதிய சந்தை பொருளாதார கோட்பாடுகள் ஊடுருவுவதே கட்டடங்களின் ஆயுள் குறைய முக்கிய காரணமாக உள்ளது.
நம் நாட்டின் பொருளாதாரம் கட்டடத்தொழில் நுட்பங்களோடு தொடர்புடையது. அதன் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சியோடு தான் இருக்கும். அப்படியிருக்கும் பட்சத்தில் நீடித்து நிலைத்து உழைக்கும் படியான தொழில் நுட்பத்தை கொண்டு வருவதில் ஆர்வம் காட்ட உற்பத்தியாளர்கள் முன் வருவதில்லை.
இன்றைய சூழலில், எந்த பொருளும் நீண்ட காலம் உழைக்க கூடாது என்ற கருத்து உற்பத்தியாளர்கள் நிலையில் இருக்கிறது. இப்படி, நீடித்து உழைத்தால், அடுத்த தயாரிப்புகளுக்கான வர்த்தகம் பாதிக்கப்படும் என்பதே இதன் நோக்கமாக உள்ளது. மேலோட்டமாய் பார்த்தால் மிக சாதாரணமாய் தோன்றும் இந்த விஷயம் எவ்வளவு பாதிப்பை நாட்டில் ஏற்படுத்தும் என யாருமே சிந்திப்பதில்லை. அந்த நேரத்து பிரச்னை அந்த நேரத்தில் சரியானால் போதும் என்றே சிந்திக்கின்றனர்.
பயன்பாட்டு நிலையில் ஏற்படும் குறைபாடுகளே கட்டடங்கள் பாழாக காரணம் என்று கூறப்பட்டாலும், வணிக ரீதியிலான நோக்கமே, கட்டடங்களின் ஆயுளை குறைப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
எனவே, வீடு கட்டுவோர் எந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்த போகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
நீங்கள் கட்டும் கட்டடம் எவ்வளவு காலம் நிலைத்து நிற்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதில், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் எவ்வித தயக்கமும் வேண்டாம்.
அதே நேரத்தில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த முழுமையான புரிதலை ஏற்படுத்தி செயல்படுவது நல்லது.
இதில் ஏதாவது குறைபாடு இருந்தால், அது கட்டடத்தின் ஆயுளை பாதிக்கும் என்கின்றனர் கட்டட அமைப்பியல் பொறியாளர்கள்.
No comments:
Post a Comment