நேரில் ஆஜராகாமல் பத்திரப்பதிவு செய்வது சாத்தியமா?
தமிழகத்தில் சொத்து விற்பனை உள்ளிட்ட பல்வேறு பத்திரங்களை ஆன்லைன் முறையில் பதிவு செய்யும் வசதி சில ஆண்டுகளாக அமலில் உள்ளது. இதில் பத்திர தகவல்களை உள்ளீடு செய்வது, அதன் உண்மை தன்மையை சரி பார்ப்பது, மதிப்பீடு பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.
ஆன்லைன் முறையில் உள்ளீடு செய்யப்பட்ட விபரங்கள் சரிபார்க்கப்பட்ட பின் பத்திரப்பதிவுக்கான நேரம் ஒதுக்கப்படும். அந்த சமயத்தில், விற்பவர், வாங்குபவர், சாட்சிகள் அடையாள சான்றுகளுடன் நேரில் ஆஜராக வேண்டும்.
இவர்களை நேரில் பார்த்து சார்-பதிவாளர் விசாரித்து உறுதி செய்த பின் தான் பத்திரப்பதிவு நடக்கும். இதில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பத்திரப்பதிவு பணிகளை முடிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக, பள்ளிகளில் பாடம் நடத்துவது, பொது மருத்துவ சிகிச்சை, அரசு ஆய்வு கூட்டங்கள், நீதிமன்ற வழக்கு விசாரணைகள் வீடியோ கான்பரன்ஸ் முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், பதிவுத்துறை மட்டும் இதற்கு விதிவிலக்காக நேரில் ஆஜராக வேண்டியதை கட்டாயமாக்கி உள்ளது.
இந்நிலையில் டில்லி உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. கொரோனா பேரிடர் காலத்தில் ஆன்லைன் முறையில் ஆஜராகி பத்திரங்களை பதிவு செய்யும் முறை குறித்து அரசின் நிலைபாடு என்ன என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இது குறித்து விளக்கம் அளிக்குமாறு, மத்திய அரசுக்கும், டில்லி மாநில அரசுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது. நேரில் வந்து ஆஜராக வேண்டும் என்ற நிலை இருக்கும் போதே சிலர் ஆள்மாறாட்டம் செய்கின்றனர், ஆன்லைன் முறையை தவறாக பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக பதிவாளர்கள் கவலைப்படுகின்றனர்.
தற்போதைய சூழலில், பெரும்பாலான நபர்கள் ஆதார் அட்டை வைத்துள்ளனர். இது போன்ற அடையாள ஆவணங்களை பயன்படுத்தி உண்மை தன்மையை உறுதி செய்ய வேண்டும்.
நீதிமன்ற விசாரணையில் ஆன்லைன் முறை சாத்தியப்படும் நிலையில் பத்திரப்பதிவு பணியில் விர்ச்சுவல் முறை வசதியை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. டில்லி உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள் இதற்கு விடையை பெற்றுத்தருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இது போன்ற ஆன்லைன் முறை அமலுக்கு வந்தால், பொது அதிகாரம் அளிப்பது குறைந்து உரிமையாளர்கள் நேரடியாக சொத்து பரிமாற்றத்தில் இறங்குவர். மேலும், சொத்து வாங்குவோர் பத்திரப்பதிவுக்காக வெளியூர் செல்ல வேண்டிய தேவை ஏற்படாது. அடுத்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் இது போன்ற நடைமுறை அமலுக்கு வரும் என்பதில் சந்தேகமில்லை என்கின்றனர் சார்-பதிவாளர்கள்.
No comments:
Post a Comment