வில்லங்க சான்றிதழில் விடுபட்ட தகவல்களை பெறுவது எப்படி?
தமிழகத்தில், விற்பனைக்கு வரும் சொத்துக்களை, அதன் முந்தைய பரிவர்த்தனைகளை அறிய, வில்லங்க சான்று பெறுவது கட்டாயம். இதில், பொதுமக்கள் வசதிக்காக, பல்வேறு நடைமுறை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, வில்லங்க விபரங்களை இலவசமாக ஆன்லைன் முறையில் பார்த்துக்கொள்ள வகை செய்யப்பட்டது. பல்வேறு
தடங்கல்களுக்கு நடுவில், இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
இணையத்தின் மூலம், வில்லங்கச் சான்று பெற விரும்புபவர்கள், உரிய கட்டணத்தை இணையத்தில் செலுத்தி, தபால் மூலம் அல்லது சார்-பதிவாளர் அலுவலகத்திலிருந்து, இரண்டு நாட்களுக்குள் பெற்று கொள்ளலாம்.
இதற்கு அடுத்தபடியாக, பொதுமக்கள் தங்கள் சொத்துக்கள், வாங்க இருக்கும் சொத்துக்கள் தொடர்பான வில்லங்க சான்று பெற சார்-பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டாம். வீட்டில்
இருந்த படியே பதிவுத்துறை இணையதளத்தில், கட்டணம் செலுத்தி, விண்ணப்பித்தால் போதும்.
வீட்டிலிருந்தவாறு இணையத்தின் வாயிலாக, வில்லங்க சான்றிதழை பெறும் வசதி இருக்கும் காரணத்தால், பொதுமக்கள் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இணையத்தின் வாயிலாக, வில்லங்கச் சான்றிதழை இலவசமாகப் பெறவேண்டுமானால் தமிழகப் பதிவுத்துறையின்
https://tnreginet.gov.in/portal/ என்ற
இணையதளத்திற்கு செல்லவேண்டும். அந்த
இணையத்தில், வில்லங்க சான்றை பார்ப்பதற்கும், பதிவிறக்கம் செய்வதற்கும் தனி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உங்கள் 'இ-மெயில்' முகவரிக்கே,
சார்பதிவாளரின் டிஜிட்டல் கையெழுத்துடன், வில்லங்க சான்றிதழ் வந்துவிடும்.
இதில், சில அடிப்படை விஷயங்களை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள், எத்தனை ஆண்டிற்கான வில்லங்க சான்றிதழ் கேட்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
ஒரு சொத்து குறித்த, 30 ஆண்டு கால பரிவர்த்தனை விபரங்கள் கிடைத்தால் போதும் என்று பலரும் கூறுகின்றனர்.
இதில், ஏதாவது சில ஆண்டுகளில் பதிவு விபரம் இல்லை என்று பதில் வந்தால், விண்ணப்பதாரர் 'அலெர்ட்' ஆக வேண்டும்.
சிலர், இப்படி பதில் வந்தால் அதை அப்படியே நம்புவதும் உண்டு.
அந்த ஆண்டில், அந்த சொத்தில், எந்த பரிவர்த்தனையும் இல்லை என்ற முடிவுக்கு வந்து விடுவர்.
இதில், விற்பனையாளரிடம் அந்த ஆண்டில், பரிவர்த்தனை நடந்ததற்கான ஆவணம் கையில் இருக்கும்.
இது போன்ற சூழலில், விற்பனையாளரிடம் இருக்கும் ஆவணங்கள் மீது, சந்தேகம் எழுவது இயற்கை.
ஆனால், உண்மை நிலையை விசாரித்தால், பதிவுத்துறை பணியாளர்கள், அந்த குறிப்பிட்ட விபரத்தை, வில்லங்க குறிப்பில் பதிவேற்றம் செய்யாமல் இருந்திருக்கலாம்.
எனவே, இத்தகைய குழப்பங்கள் ஏற்பட்டால், அவசரப்பட்டு, எந்த முடிவுக்கும் வந்துவிடாதீர். பத்திர
சான்றுகள் அவற்றின் உண்மை தன்மை தொடர்பான விஷயங்களை சரிபார்த்து முடிவு எடுப்பது அவசியம்.
தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் சென்றும், இது தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். இதனால்,
தவறான சந்தேகம் அடிப்படையில் முடிவு எடுப்பதை தவிர்க்கலாம் என்கின்றனர் பதிவுத்துறை அதிகாரிகள்.
நன்றி : தினமலர் கனவு இல்லம்
No comments:
Post a Comment