நிறைய பேர் வீட்டுமனைக்கான அங்கீகாரம் பற்றிய தகவல்களை சரிவர ஆராயாமல் குறைந்த விலையில் கிடைப்பதையே தங்களுக்கு சாதகமான அம்சமாக நினைத்து மனை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். எந்த பகுதியில் மனை வாங்கினாலும் அந்த பகுதியை சூழ்ந்திருக்கும் கட்டமைப்பு வசதிகளை மட்டும் கவனத்தில் கொள்ளக்கூடாது. சகல வசதிகளும் நிறைந்திருப்பதை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் மனை பற்றிய அத்தனை ஆதாரங்களையும் சரிபார்க்க வேண்டும்.
குறிப்பாக, விற்பனைக்கு வரும் மனை தொடர்பான ஆவணங்கள், அங்கீகாரம் உள்ளிட்ட விஷயங்களில் மக்கள் கவனம் செலுத்துகின்றனர். இத்துடன் மனை அமைந்துள்ள பகுதியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகள் குறித்தும் கவனிக்க வேண்டும்.
ஒதுக்கீடு செய்யும்போது மனைப்பிரிவுகளில் குறிப்பிட்ட பகுதியை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்போது தான் மனைப்பிரிவுக்கு அங்கீகாரம் கிடைக்கும். சிலர் அப்படி செய்யாமல் அனைத்து மனைப்பிரிவுகளையும் விற்பனை செய்து விடுவதன் மூலம் மனை வாங்குபவர்கள் பிரச்னையை சந்திக்க நேரிடும். எனவே மனை வாங்கும்போது அதற்கு செல்லும் சாலை வசதியை கவனத்தில் கொள்வதுடன் பொது பயன்பாட்டுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதற்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புக்கு சென்று அந்த மனை பற்றிய விபரங்களை சரி பார்ப்பது நல்லது.
பெரும்பாலான மக்கள் சமவெளி பகுதிகளிலேயே மனைகள் வாங்குகின்றனர். இதில் அந்த மனைகள் அருகில் குவாரிகள், நீர் நிலைகள், தொழிற்சாலைகள் இருக்கிறதா என்று பார்ப்பது வழக்கம். ஆனால், மலைப்பகுதிகளில் மனை வாங்குவோர் கூடுதலாக சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். நம்மில் பலருக்கும் சுற்றுலா முக்கியத்துவம் உள்ள மலைப்பகுதிகளில் மனை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். வாழ்க்கையில் ஏதாவது ஒரு காலகட்டத்தில் அங்கு சென்று பொழுதை கழிக்க மாட்டோமா என்ற ஏக்கத்திலேயே இத்தகைய மனைகளை மக்கள் வாங்குகின்றனர். இவ்வாறு மனைகள் வாங்குவதில் அடிப்படையில் எந்த தவறும் இல்லை. ஆனால், அந்த மனைகள் யாருடையது என்பதில் மிக அதிக கவனம் செலுத்த வேண்டும்.
மலைப்பகுதிகளில் பெரும்பாலான நிலங்கள் வனத்துறை கட்டுப்பாட்டிலும், பழங்குடியின மக்களின் சொத்தாகவும் இருக்கும். இது போன்ற பிரிவு நிலங்களை வாங்குவதால் எதிர்காலத்தில் பல்வேறு சட்ட சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். மேலும், இதில் சுற்றுச்சூழல் சார்ந்த அரசின் கட்டுப்பாடுகள் என்ன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பெரும்பாலான மலைப்பகுதி மனைகளில் கட்டடங்கள் கட்டுவதற்கும், போர்வெல் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தவும் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. இவற்றை கவனிக்காமல் மனை வாங்கியவர்கள் பிற்காலத்தில் அதை பயன்படுத்த முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. இது போன்ற மனைகள் விற்பனைக்கு வரும் நிலையில், சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்தை அணுகி, அங்கு சுற்றுச்சூழல் ரீதியாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து விசாரிக்க வேண்டும். இதில் தெளிவு ஏற்பட்ட நிலையிலேயே மனை வாங்குவது குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.