கதவு ஜன்னல்களை கரையான்களிடம் இருந்து பாதுகாக்க உதவும் பூச்சிக்கொல்லி மருந்துகள்
வாழ்நாள் சேமிப்பையெல்லாம் சேர்த்து, கடன் வாங்கி, சொத்துக்களை விற்று மனை வாங்கி, அழகாய் வீடு கட்டியிருப்போம். மிக எளிதாய் பல சங்கடங்கள் தானாய் வந்து சேரும். பதிவு, மின்சாரம், குடிநீர், அக்கம் பக்கத்தினருடன் பிரச்னை, கட்டட பொறியாளர், தொழிலாளர்கள் என பலவற்றை தாண்டி, வீடு கட்டி குடி வந்த பிறகும் நம்மைத் தொடரும் சில சங்கடங்கள். அவற்றில் மிக முக்கியமானவை, வீடு கட்ட பயன்படுத்திய மூலப் பொருட்கள்.வீட்டில் கதவு, ஜன்னல்கள், அலமாரிகள் அமைப்பதில் சரியான மரத்தை தேர்வு செய்து, முறையாக பயன்படுத்த வேண்டும். இதில் மிகவும் கவனமாக இருந்தாலும், சில சமயங்களில் கறையான் போன்ற பாதிப்புகள் சேதத்தை ஏற்படுத்தி விடுகின்றன.
கட்டுமான பணியில் மரங்களை பயன்படுத்தும் போது, அதில் ஈரம் மற்றும் பூச்சிகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மரங்களை கட்டடத்தில் பொருத்தும் இடத்தில் இத்தகைய பூச்சிக்கொல்லி மருந்துகள் அவசியமாக தேவைப்படுகின்றன.
ஒருமுறை கறையானின் பாதிப்பு ஏற்பட்டுவிட்டால், என்ன செய்தாலும் முழுதும் நீக்குவது கடினம். ஆகையால், வராமல் பார்த்துக் கொள்வது தான் முக்கியம்.
முந்தைய காலத்தில் கறையான்கள் உருவாகாமல் இருக்க தாரை பயன்படுத்தி வந்தனர். சாலைகள் அமைக்க பயன்படுத்தப்படும் தாரை வாங்கி சூடுபடுத்தி மரங்களில் பூசுவது வழக்கமாக இருந்தது. இதில் காலத்துக்கு ஏற்ப சில மாற்றங்கள் ஏற்பட்டு, புதிய வகை பொருட்கள் பயன்படுத்தும் தனி நிறுவனங்கள் வந்து விட்டன.
நாம் வீட்டில் பயன்படுத்தாத மரப் பொருட்களை, தனி அறையில் போட்டு மூடி வைத்திருப்போம். சில காலத்திற்கு பின் அதை திறக்கும் போது கறையான் அரித்திருக்கும். நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இதனால் நிதியிழப்பு ஏற்படும். இதை தடுக்க, 'பெஸ்ட் கன்ட்ரோல்' நிறுவனங்களை நாடலாம். இந்நிறுவனங்கள், சதுர அடிக்கு ஏற்ப கட்டணம் கணக்கிடப்படும். 5 ஆண்டுகளுக்கு கறையான்கள் வராது என உத்தரவாதம் தருகின்றனர்; அதிலும் சில கட்டுப்பாடுகள் உள்ளன.
குறிப்பிட்ட கட்டட தரை எந்த வகையில் அமைத்துள்ளனர் என பார்ப்பர். சிமென்ட் தரை என்றால் ஒரு அடி கணக்கில் சுவரை ஒட்டி சாக்பீஸ் நுழையும் அளவு டிரில் செய்து ஓட்டை போடுவர். அதில் வரும் மண்ணை அகற்றி கெமிக்கலை அரை மணி நேரம், ஒரு முறை மருந்து தெளிப்பான் மூலம் உள்ளே செலுத்துவர். மார்பிள் தரையை ஒட்டி 'எல்' வடிவ ஓட்டையிட்டு மருந்து செலுத்தப்படும். பின் சாக்பீஸை கெமிக்கலில் ஊற வைத்து ஓட்டைகளில் வைத்து, தரை நிறத்திற்கு ஏற்ப சிமென்ட் கலர் பூசுவர். இதனால் ஓட்டை போட்டது தெரியாத அளவு தரை மாறும். இப்படி செய்தால் குறைந்தது ஐந்து ஆண்டுகள் வரை கறையான் தொல்லை இருக்காது.
குறிப்பாக, 'கிரியோஸேட்' என்ற பொருளின் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது. நிலக்கரியில் இருந்து கிடைக்கும் தார் பல கட்டங்களில் சுத்திகரிக்கப்பட்டு கிரியோஸேட் தயாரிக்கப்படுகிறது. தரையில் குழி எடுத்து நிறுத்தப்படும் மரங்களில் பூச்சி அரிப்பு ஏற்படாமல் இருக்க இதை பயன்படுத்த துவங்கினர்.
மரங்களை ஈரம், கறையான் ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பதில் கிரியோஸேட் பயன்பாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது. உங்கள் வீட்டுக்கான கட்டுமான பணியில் மரங்களை கறையானிடம் இருந்து பாதுகாக்க, என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதில் கவனமாக இருங்கள்.
கட்டுமான நிறுவனம் என்ன செய்ய இருக்கிறது என்பதை விசாரித்து அறிய வேண்டும். இது விஷயத்தில் பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்துவதில்லை. மரங்களில் அனைத்து பக்கங்களிலும், வார்னீஷ் அடித்தால் போதும் என்ற எண்ணத்தில் இருந்து விடுகின்றனர்.
பொதுவாக கறையான் போன்றவை, மரங்களை மட்டுமல்லாது நாளடைவில் கட்டடத்துக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். கறையான் விஷயத்தில் துளியும் அலட்சியம் காட்டாமல் இருக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் கட்டுமானத்துறை வல்லுனர்கள்.