பொதுவாக வீடுகளில் எப்போதும் ஏதாவது சிறு பழுது பார்க்கும் வேலைகள் இருக்கும் என்பது எதார்த்த நிலை. ஆனால், மிகச்சிறிய அளவிலான பழுதுகள் ஏற்படும்போது, அதை உடனடியாக சரி செய்ய பணியாளர்களை தேடினால், அவர் கேட்கும் தொகை மலைக்க வைப்பதாக இருக்கும்.
இதில் வீடுகளில் என்னென்ன வகைகளில் பழுதுகள் ஏற்படும் என்பது தொடர்பாக அடிப்படை புரிதல் இருப்பது அவசியம். குறிப்பாக, எந்த வகையான பழுதை சரி செய்ய யாரை எப்போது அணுக வேண்டும் என்பது தொடர்பாகவும் மக்களிடம் விழிப்புணர்வு இருக்க வேண்டும்.
மிகச் சாதாரணமாக சரிசெய்துவிடக் கூடிய நிலையில் உள்ள பிரச்னைகளுக்குக் கூட ஆட்களை தேடுவது தற்போது அதிகரித்துள்ளது. வீட்டில் கான்கிரீட் கட்டுமானம் தொடர்பான ஏதாவது சிறு உடைப்புகள், விரிசல்கள் இருக்கும் நிலையில் வேறு பெரிய வேலைக்கு ஆட்களை அழைக்கும்போது இதை சரிசெய்யலாம் என்று இருப்போம்.
ஆனால், அக்கம் பக்கத்தில் வேறு ஏதாவது கட்டுமான வேலைக்கு வந்த பணியாளர்கள், தானாக முன்வந்து உங்களிடம் வீட்டில் பழுது பார்க்க வேண்டிய வேலை இருக்கிறதா என்று கேட்டால் குறைந்த செலவில் முடித்து விடலாம் என்று பலரும் இறங்கி விடுகின்றனர்.
உண்மையில் வீட்டில் பழுது பார்க்கும் பணிக்கு யாரும் தானாக முன்வந்து பணி புரிய வரமாட்டார்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இன்றைய விலைவாசி சூழலில் யாராவது ஒருவர் உங்களிடம் தானாக வந்து வீட்டில் பழுது பார்க்கும் வேலை கொடுங்கள் என்றால், அதில் அவருக்கு வேறு திட்டம் இருக்கலாம்.
குறிப்பாக, சில இடங்களில் புதிய கட்டுமான திட்டங்களை செயல்படுத்தும் போது அங்கு, சில பணியாளர்களை தங்க வைப்பது வழக்கம். இவ்வாறு தங்கும் பணியாளர்கள் அக்கம் பக்கத்தில் பழைய வீடுகளில் இருப்பவர்களை அணுகி, பழுது பார்க்கும் வேலை இருந்தால் சொல்லுங்கள் குறைந்த செலவில் முடித்து தருகிறேன் என்பர். வீட்டு உரிமையாளரும் செலவு குறைகிறதே என்று நம்பி இதுபோன்ற நபர்களை பயன்படுத்த முன்வருகின்றனர்.
இவ்வாறு வரும் நபர்கள் ஆரம்பத்தில் ஏதாவது ஒரு வேலையைக் குறிவைத்து அதை மிகக் குறைந்த செலவில் சரி செய்வதாகக் கூறுவர். ஆனால், அதன்பின் வேறு ஏதாவது ஒரு விஷயத்தை குறிப்பிட்டு இதை சரி செய்யாவிட்டால் பெரிய பிரச்னை ஏற்படும் என்று அச்சமூட்டுவர்.
இதனால், தானாக வந்த நபர், 1000 ரூபாய் செலவாகும் வேலையை, 200 ரூபாயில் முடித்து தருவதாகக் கூறினால் அதை எளிதில் நம்பிவிடாதீர்கள்.
இன்றைய சூழலில், 1000 ரூபாய் செலவாகும் வேலையை யாரும் மிகக் குறைவான தொகையில் முடித்துக் கொடுக்க மாட்டார்கள் என்பதை புரிந்து செயல்படுங்கள்.
இதுபோன்று ஆசை காட்டி வீட்டுக்குள் நுழையும் நபர்கள், ஒன்று வேறு ஒரு வேலையை குறிப்பிட்டு கூடுதல் தொகையை உங்களிடம் இருந்து வசூலித்து விடுவர்.
இன்னொன்று, சிறிய வேலையை முடித்து தருவதாக வரும் நிலையில் வீட்டை நோட்டம் விட்டு, உட்புற சூழலை அறிந்து கொண்டு, திருட்டு, கொள்ளைக்கு வழிவகுத்துவிட வாய்ப்புள்ளது.
எனவே, இதுபோன்று பரிச்சயம் இல்லாத நபர்களை வீடு பழுது பார்க்க பயன்படுத்த வேண்டாம் என்கின்றனர் கட்டுமானப் பொறியாளர்கள்.
No comments:
Post a Comment