Thursday, March 6, 2025

தரம் உயர்ந்த உள்ளாட்சிகளில் நில வழிகாட்டி மதிப்பு 30% உயர்கிறது: பதிவுத்துறை நடவடிக்கை

 தரம் உயர்ந்த உள்ளாட்சிகளில் நில வழிகாட்டி மதிப்பு 30% உயர்கிறது: பதிவுத்துறை நடவடிக்கை

மக்கள்தொகை பெருக்கம், நகரமயமாதல் காரணமாக, தரம் உயர்த்தப்பட்ட உள்ளாட்சி பகுதிகளில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை உயர்த்தும் பணிகளை, பதிவுத் துறை துவக்கி உள்ளது.

இதனால், உள்ளாட்சி அமைப்புகளில் வழிகாட்டி மதிப்பு, நிலத்தின் குறைந்தபட்ச விலை, 30 சதவீதம் வரை உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய நான்கு நிலைகளில், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. மக்கள்தொகை பெருக்கம், நகர்ப்புற வளர்ச்சி அதிகரிப்பு காரணமாக, பல்வேறு உள்ளாட்சி அமைப்புகள் அடுத்தடுத்த நிலைக்கு தரம் உயர்த்தப்படுகின்றன.

இந்த வகையில், கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டன. இதில் அக்கம் பக்கத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் இணைக்கப்பட்டு உள்ளன.

நிர்வாக ரீதியாக உள்ளாட்சி அமைப்புகள் தரம் உயர்த்தப்படும்போது, அப்பகுதிக்கான வரி உள்ளிட்ட விஷயங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

குறிப்பாக, பதிவுத் துறையில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு, பெரும்பாலும் உள்ளாட்சி அமைப்பு நிலைக்கு ஏற்ப தான் நிர்ணயிக்கப்படுகிறது.

உதாரணமாக, ஒரே கிராமத்தில் ஊராட்சியாக உள்ள பகுதிக்கு குறைவாகவும், நகராட்சிக்கு சற்று கூடுதலாகவும், வழிகாட்டி மதிப்பின் அடிப்படை மதிப்புகள் வேறுபடும்.

இந்நிலையில், சமீபத்தில் தரம் உயர்த்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில், நில வழிகாட்டி மதிப்புகளை உயர்த்த வேண்டிய தேவை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பொதுவாக கிராம அடிப்படையிலும், போக்குவரத்து வசதிகள் அடிப்படையிலும்தான் நிலங்களுக்கு வழிகாட்டி மதிப்புகள் நிர்ணயிக்கப்படும். ஆனால், கடந்த முறை நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புகள், உள்ளாட்சிகளின் நிலைக்கு ஏற்ப வரையறுக்கப்பட்டுள்ளன.

மேலும், நிலங்களின் குறைந்தபட்ச விலைகளும், உள்ளாட்சி அமைப்புகள் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

பேரூராட்சிகளில் 1 சதுர அடி நிலத்துக்கு குறைந்தபட்ச மதிப்பு, 50 ரூபாயாக உள்ளது; இது உள்ளாட்சி நிலை அடிப்படையில், 1,000 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, பேரூராட்சிகளில் விவசாய நிலத்தின் குறைந்தபட்ச விலை ஏக்கர், 2 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இதுவும் உள்ளாட்சிகளின் நிலைக்கு ஏற்ப, ஏக்கர், 5 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

தரம் உயர்த்தப்பட்டதன் அடிப்படையில், உள்ளாட்சிகளில் நில வழிகாட்டி மதிப்புகளை திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன்படி, தற்போது உள்ள மதிப்புகளில் அதிகபட்சம், 30 சதவீதம் வரை உயர்வு இருக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு

  மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு 'சென்னை பெருநகர் பகுதிக்கான மூன்றாவது முழுமை திட்டத்துக்காக, 28 தலைப்ப...