Monday, November 25, 2024

சொத்துக்களின் வில்லங்க சான்றிதழ்களை பயன்படுத்துவது எப்படி?

 

வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்குவோர், அவை தொடர்பான முந்தைய பரிமாற்றங்களை அறிய வில்லங்க சான்றிதழ் பேருதவியாக உள்ளது.  தமிழகத்தில் சொத்துக்களுக்கான வில்லங்க  சான்றிதழ்களை பெற, இரண்டு விதமான வழிமுறைகள் அமலில் உள்ளன.


இதன்படி,சொத்துக்களின் முந்தைய பரிமாற்றங்கள் மற்றும் வில்லங்க விபரங்களை இலவசமாக ஆன்லைன் முறையில் பார்ப்பது.  இதற்கு அடுத்தபடியாக, முறையாக அதிகாரிகள் கையெழுத்து, முத்திரையுடன் ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்தி வில்லங்க சான்றிதழ் பெறலாம்.

இதில் முதலில் தெரிவிக்கப்பட்ட வழிமுறை என்பது, ஒரு சொத்து தொடர்பாக ஏதாவது வில்லங்கம் உருவாகியுள்ளதா என்பதை அடிப்படை நிலையில் மக்கள் அறிய பதிவுத்துறை கொடுத்துள்ள வாய்ப்பு.  கடந்த 2013ல் தமிழக அரசு அறிவித்த இந்த வழிமுறை, வீடு, மனை வாங்குவோருக்கு பேருதவியாக உள்ளது.

இதில், மேனுவல் முறையில் கட்டணம் செலுத்தி வில்லங்க சான்றிதழ் பெறுவதும் தற்போது ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது.  இதனால், பொதுமக்கள் வீட்டில்  இருந்தபடியே ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்தி வில்லங்க சான்றிதழை பெறலாம்.

இதில், சொத்து தொடர்பான என்ன வகை பரிமாற்றத்தில் தற்போது ஈடுபட இருக்கிறீர்கள் என்பதை அறிந்து, அதற்கு ஏற்ற வழிமுறையை தேர்வு செய்ய வேண்டும்.  குறிப்பாக, உங்கள் தகவலுக்காக, சொத்தில் ஏதாவது வில்லங்கம் ஏற்பட்டு இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டால், அதற்கு இலவச வழிமுறையை பயன்படுத்தலாம்.

அதே நேரம், வங்கியில் கடன் பெறுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக இருந்தால், கட்டணம் செலுத்தி, கையெழுத்து, முத்திரையுடன் வழங்கப்படும் வில்லங்க சான்றிதழை பெறுவது அவசியம்.  ஆனால், இதிலும் சில வங்கிகள், அடிப்படை ஆய்வுகளின் போது இலவச முறையில் வழங்கப்படும் வில்லங்க விபரங்கள் இருந்தால் போதும் என்று விட்டுவிடுகின்றனர்.

அடிப்படை ஆய்வுகள் முடித்து கடன் கொடுப்பதற்கான ஒப்பந்தம் தயாரிப்பது, பதிவு செய்யும் நிலையில் கட்டணம் செலுத்தி பெறப்படும் வில்லங்க சான்றிதழ்களை வங்கிகள் கேட்கின்றன.  இதன்படி, வங்கிகளின் தேவைகள், கருத்துகள் அடிப்படையில் வில்லங்க சான்றிதழ்களை பெறுவது நல்லது.

குறிப்பாக, புதிய வீடு, மனை வாங்குவதற்கான தேடலில் ஈடுபட்டுள்ள நிலையில், ஒவ்வொரு சொத்துக்கும் கட்டணம் செலுத்தி வில்லங்க சான்றிதழ் வாங்கி ஆய்வு செய்வது சரியான வழிமுறையாக இருக்காது.  இது போன்ற சமயத்தில் இலவச முறையில் வில்லங்க விபரங்களை பயன்படுத்துவது நல்லது.

இதில் ஒரு குறிப்பிட்ட சொத்தை தேர்வு செய்த பின், அது தொடர்பான அடுத்த கட்ட நடைமுறைகளில் ஈடுபடும் போது, கட்டணம் செலுத்தி பெறப்படும் வில்லங்க சான்றிதழ்களை பயன்படுத்துவது நல்லது.  இந்த வேறுபாட்டை சரியாக புரிந்து செயல்பட்டால் சிக்கல்களை தவிர்க்கலாம் என்கின்றனர் பதிவுத்துறை அலுவலர்கள்.

No comments:

Post a Comment

மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு

  மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு 'சென்னை பெருநகர் பகுதிக்கான மூன்றாவது முழுமை திட்டத்துக்காக, 28 தலைப்ப...