அடுக்குமாடி திட்டங்களில் வீடு வாங்க செல்வோர், பரப்பளவு போன்ற அடிப்படை விஷயங்களுக்கு அப்பால் பால்கனி இருக்கிறதா என்றுதான் பார்க்கின்றனர். பொதுவாக அடுக்குமாடி குடியிருப்புகளில் வெளி உலக தொடர்புக்கான ஆதாரமாக பால்கனி அமைந்துள்ளது என்றால் அது மிகையல்ல.
அடுக்குமாடி வீடுகளில் பல்வேறு இடங்களில் பல்வேறு அளவுகளில் ஜன்னல்கள் அமைக்கப்பட்டாலும், பால்கனி இல்லாவிட்டால் அது பெரும் குறையாக தான் இருக்கும். வீடு கட்டுவதற்கான வரைபடம் தயாரிக்கும் நிலையிலேயே கட்டுமான நிறுவனங்கள் ஒவ்வொரு வீட்டுக்குமான பால்கனி அமையும் இடத்தை முடிவு செய்கின்றனர்.
கட்டடத்தின் அமைப்பு அடிப்படையில் பால்கனிக்கான நீளம், அகலம் போன்ற விஷயங்களை கட்டட வடிவமைப்பாளர்கள் முடிவு செய்கின்றனர். இதனால், அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் பால்கனி என்பது இன்றைய சூழலில், அத்தியாவசிய தேவையாக உள்ளது.
கான்கிரீட் சுவர்களுக்கு நடுவில், நாள் முழுதும் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டவர்கள் காலையும், மாலையும் ஆசுவாசம் ஆக ஏற்ற இடமாக பால்கனி அமைந்துள்ளது. வீட்டில் இருந்து சட்டென வெளியிலோ, மொட்டை மாடிக்கோ செல்ல முடியாத நிலையில் பால்கனிக்கு சென்றால், அக்கம் பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துக் கொள்ளலாம்.
இந்த வகையில் கட்டட வடிவமைப்பில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களுடன், பால்கனி அமைப்பது, பயன்படுத்துவதிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு கட்டடத்தில் பால்கனி எங்கு, எப்படி அமைக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்.
குறிப்பாக, கட்டடத்தின் அனைத்து பக்கத்திலும் பால்கனி அமைப்பது என்பது நடைமுறைக்கு ஒத்துவராத விஷயமாகிவிடும்.
ஒரு குறிப்பிட்ட இடத்தை பால்கனி அமைக்க தேர்வு செய்யும்போது, வெளிப்புறத்தில் உள்ள சூழல் என்ன என்பதை கவனத்தில் வைத்து செயல்பட வேண்டும்.
இதே போன்று வீட்டின் உட்புற சூழலையும் கருத்தில் கொண்டு தான் பால்கனிக்கான இடத்தை தேர்வு செய்ய வேண்டும். பொதுவாக வீட்டில் வரவேற்பு அறை, உணவருந்தும் இடத்தை ஒட்டி பால்கனி அமைத்தால், அதை வரவேற்பு அறையின் நீட்சியாக பயன்படுத்தலாம்.
வீட்டுக்கு வரும் விருந்தினர்களுடன் அமர்ந்து பேசும் அளவுக்கு இந்த இடத்தில் பால்கனியின் அமைப்பை முடிவு செய்வது அவசியம்.
அதே நேரம், சமையல் அறை, படுக்கை அறையை ஒட்டி தான் பால்கனி அமைக்க இடம் கிடைக்கிறது என்றால், அதன் பயன்பாடும் மாறிவிடும். படுக்கை அறை, சமையலறையின் நீட்சியாக பால்கனி அமைக்கப்படும் நிலையில், அங்கு பாதுகாப்புக்காக உரிய தடுப்பு மற்றும் கதவு வசதிகளை ஏற்படுத்த வேண்டியது அவசியம். பால்கனியில் தோட்டம் அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பலரும் செயல்படுகின்றனர்.
இவ்வாறு தோட்டம் அமைக்கும் நிலையில் அதனால், கட்டட அமைப்புக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.
No comments:
Post a Comment