அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய அடிப்படை தகவல்கள்!
பொதுவாக அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் வீடு வாங்கும் போது, அதில் என்னென்ன வசதிகள் உள்ளன என்பதை சரி பார்ப்பதில் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை. கட்டுமான நிறுவனம் சொல்லும் அனைத்து வகையான வசதிகளும் முறையாக செய்யப்பட்டுள்ளதா என்பதை, வீடு ஒப்படைப்பதற்கு முன் சரி பார்க்க வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் அனைத்து ஆவணங்களையும் சரி பார்த்து, வீடு வாங்கும் போது அதில் வீட்டுக்குள் என்னென்ன வசதிகள் செய்து தரப்படும் என, கட்டுமான நிறுவனம் உறுதியளித்த விஷங்கள் முறையாக நிறைவேற்றப்பட வேண்டும். இதில், பெரும்பாலான சமயங்களில் வீடு ஒப்படைக்கும் போது அமைதியாக இருப்பவர்கள், அதன் பின் புகார் தெரிவிப்பது வழக்கமாக உள்ளது.
நீங்கள் வாங்கும் வீட்டில் என்னென்ன வசதிகள் செய்து தரப்படும் என, கட்டுமான நிறுவனம் கூறும் விபரங்களை நம்புவது தவறில்லை. அதில் கட்டுமான செலவுக்கான பட்ஜெட்டில் எது சாத்தியப்படும் என்ற எதார்த்த நிலவரத்தை மக்கள் அறிய வேண்டியது அவசியம்.
கட்டுமான நிறுவனம் சார்பில் பேசும் விற்பனை முகவர்கள் சில சமயங்களில் பல்வேறு கூடுதல் வாக்குறுதிகளை அளிக்க வாய்ப்புள்ளது. இத்தகைய வாக்குறுதிகள் கட்டுமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ உறுதியா என்பதை சரிபார்க்க வேண்டும்.
பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள், தங்கள் பட்ஜெட்டுக்கு உட்பட்டு வரும் சிறப்பு வசதிகளை மட்டுமே மக்களுக்கும் வழங்கும் நிலையில் உள்ளன. தற்போதைய விலைவாசியை கருத்தில் வைத்து, இது போன்ற வாக்குறுதிகளை நம்புவதில் கவனமாக இருக்க வேண்டும்.
சில இடங்களில் எதார்த்த சூழலில் சாத்தியமில்லை என்று தெரிந்தும், வீடு வாங்கும் நபர்கள் குறிப்பிட்ட சில கூடுதல் வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கோருகின்றனர். இது போன்ற நிலையில், உங்கள் அழுத்தம் காரணமாக கட்டுமான நிறுவனம் அந்த வசதிகளை செய்து கொடுத்தால், அதற்கான செலவு வேறு இடத்தில் சமரசம் செய்யப்பட்டு இருக்கும்.
அவ்வாறு, சமரசம் செய்யப்பட்ட காரணத்தால் கட்டடத்தின் வேறு பாகத்தில் புதிதாக ஏதாவது குறைபாடு வரும் போது, அப்போது வருத்தப்படுவதால் எவ்வித பயனும் இல்லை. இன்றைய சூழலில் கட்டுமான பொருட்களின் விலை கட்டுப்பாடு இன்றி உயர்ந்து வருகிறது.
இதில் ஒரு குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் எது சாத்தியப்படும் என்பதை உணர்ந்து அதற்கு ஏற்ப உங்கள் எதிர்பார்ப்பு இருப்பதை உறுதி செய்யுங்கள். இவ்வாறு, எதார்த்த நிலையை புரிந்து செயல்பட்டால், வீடு வாங்கும் நிலையில் பிரச்னைகளை தவிர்க்கலாம் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.
No comments:
Post a Comment