Wednesday, June 5, 2024

தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இடங்களில் வீடு, மனை வாங்குவோர் கவனிக்க

 தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இடங்களில் வீடு, மனை வாங்குவோர் கவனிக்க

வீடு, மனை வாங்க வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபடுவோர், தங்கள் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக, எந்த இடத்தில் வீடு வாங்க வேண்டும், அந்த இடம் நமக்கு ஏற்றதா என்பதை தெளிவாக கவனிக்க வேண்டும். 


இதில், ஒரு இடத்தில் குடியேற வேண்டும் என்றால், தினசரி வாழ்க்கைக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் அனைத்து அடிப்படை வசதிகளும் அங்கு இருக்க வேண்டும். போக்குவரத்து வசதிகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் ஆகியவை முறையாக இருக்க வேண்டும்.


வில்லங்கம் இல்லாத சொத்தாக இருக்க வேண்டும் என்பதுடன், இது போன்ற அடிப்படை தேவைகளும் பூர்த்தியாக வேண்டியது அவசியம். சில சமயங்களில் சொத்து வில்லங்கம் எதுவும் இல்லாமல் சிறப்பான முறையில் அமைந்து இருந்தாலும் அதில், அடிப்படை வசதிகள் குறைபாடு காணப்படும். 


அடிப்படை வசதிகளை பொறுத்தவரை, நீங்கள் வாங்கும் வீடு, மனைக்கு முறையான சாலைகள், கழிவுநீர், மழைநீர் வடிகால் வசதிகள் இருக்க வேண்டியது அவசியம். இத்துடன் அந்த இடத்தில் நிலத்தடி நீர் எந்த அளவுக்கு கிடைக்கிறது, அதன் தரம் என்ன என்பதை முறையாக ஆய்வு செய்வது அவசியம்.



இதில் அனைத்து விதத்திலும் நம்மை திருப்தி படுத்தினாலும், தண்ணீர் விஷயத்தில் சில குறைபாடுகள் இருக்கும் சொத்தை வாங்குவது நல்லதா என்ற கேள்வி எழுகிறது. ஒரு இடத்தில் குடியிருக்க வேண்டும் என்றால், தண்ணீர் வசதி மிக மிக அடிப்படையான தேவை.

எனவே, நீங்கள் வீடு, மனை வாங்கும் இடத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறதா என்பதை கவனித்து பார்க்க வேண்டியது அவசியம். சென்னை போன்ற நகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு என்பது தவிர்க்க முடியாத ஒரு விஷயம் தான் என்றாலும், அது கோடை காலத்தில் மட்டும் இருந்தால் சமாளித்துக்கொள்ளலாம்.

ஆனால், ஆண்டு முழுதும் தண்ணீர் தட்டுப்பாடு இருக்கும் என்றால், அந்த பகுதிகளில் வீடு வாங்குவதை தவிர்ப்பது நல்லது. ஆண்டில் சில மாதங்கள் தண்ணீர் தட்டுப்பாடு என்றால், லாரிகள் வாயிலாக வாங்கி, கீழ் நிலை தொட்டிகளில் நிரப்பி வைத்து பயன்படுத்தலாம்.

இந்த நடைமுறையை ஆண்டு முழுதும் கடைப்பிடிப்பது என்பது, அதிகம் செலவு பிடிக்கும் வழிமுறையாக அமைந்துவிடும். எனவே, தட்டுப்பாடு உள்ள பகுதி என்று தெளிவாக தெரியும் இடங்களில் வீடு, மனை வாங்குவதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

அனைத்து வசதிகளும் நல்ல முறையில் உள்ளது, விலையும் குறைவாக இருக்கிறது, வில்லங்கம் இல்லை என்பது சிறப்பு தான் என்றாலும், தண்ணீர் தட்டுப்பாடு என்பது உங்கள் தினசரி வாழ்க்கையில் பிரதான தேவை. இந்த விஷயத்தை எதார்த்த நிலையில் புரிந்து, அதன் அடிப்படையில் முடிவுகளை எடுப்பது நல்லது என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.

No comments:

Post a Comment

Bigger the house, bigger the responsibilities

  Here is a look at the aftermath of upgrading to a larger space Regardless of the size of the current home, many homeowners often nurture t...