வீடு கட்டுவதில் குழப்பம் ஏற்படுத்தும் தகவல்களை தவிர்ப்பது நல்லது
சொந்தமாக நிலம் வாங்கி அதில் நம் விருப்பப்படி வீடு கட்டி குடியேற வேண்டும் என்பது தான் பெரும்பாலான மக்களின் விருப்பமாக உள்ளது. இதற்கான வழிமுறைகளை தேர்வு செய்வதிலும், செயல்படுத்துவதிலும் தான் பல இடங்களில் குழப்பங்கள் ஏற்படுகின்றன.எந்த ஊரில் வீடு கட்ட வேண்டும் என்பதை முடிவு செய்து அதற்காக, நிலம் வாங்கி வைத்து இருப்பீர்கள். அந்த நிலத்தில் வங்கிக்கடன் வாயிலாக நிதி திரட்டி வீடு கட்ட திட்டமிடும் போது அதற்கான வழிமுறைகள் குறித்த விஷயங்களில் உரிய நம்பகமான நபர்களின் வழிகாட்டுதல்களை ஏற்பது நல்லது.
இதில் ஒருவர் வீடு கட்ட வேண்டும் என்று நினைத்து அதற்கான முயற்சிகளில் இறங்கினால், பல்வேறு தரப்பில் இருந்து ஏராளமான ஆலோசனைகள் இலவசமாக கொட்டும். இது போன்று குவியும் ஆலோசனைகளில் எதை ஏற்பது, எதை தவிர்ப்பது என்பதில் தெளிவாக முடிவு எடுக்க வேண்டும்.
நீங்கள் புதிதாக கட்ட உத்தேசித்துள்ள வீடு எப்படி இருக்க வேண்டும் என்பதை உங்கள் குடும்பத்தின் தேவை அறிந்து முடிவு செய்யுங்கள். மற்றவர்களின் விருப்பத்தைவிட அந்த வீட்டை தினசரி பயன்படுத்தும் நபரகளின் விருப்பம் தான் மிக மிக அவசியம்.
அதே சமயம், குடும்பத்தினரின் விருப்பப்படி என்ன வசதிகள் எப்படி அமைய வேண்டும் என்பதை பொறியாளருடன் கலந்தாலோசித்து முடிவு செய்யுங்கள். இதில் நீங்கள் மனை வாங்கி வைத்துள்ள ஊரில் என்ன விதத்தில், என்ன கட்டடகலை முறையில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்பதை பாருங்கள்.
பெரும்பாலான மக்கள் என்ன வழிமுறையை கடைபிடிக்கின்றனர் என்று பார்த்து அந்த வழியில் உங்கள் வீட்டையும் கட்டுவது தான் சிக்கல் தவிர்ப்பு வழிமுறையாக இருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட கட்டட கலையில் காணப்படும் சிறப்பு அம்சங்களை சேர்த்து ஒரே வீட்டை கட்டுவது என்பது ஒருவகையில் அழகாக இருக்கலாம்.
ஆனால், எதார்த்த நடைமுறையில் ஒரு குறிப்பிட்ட பட்ஜெட்டில் வீடு கட்டி முடிக்க வேண்டும் என்ற சூழலில் இருப்பவர்கள் இது போன்ற முயற்சிகளில் இறங்குவதை தவிர்ப்பது நல்லது. மேலோட்டமாக பார்த்தால் செலவு குறைப்பு போன்று தெரியும் சில வழிமுறைகள் நடைமுறையில் கூடுதல் செலவை ஏற்படுத்துவதாக உள்ளன.
குறிப்பாக, யாரோ சொன்னார்கள் என்பதற்காக நீங்கள் தேவையில்லாத செயல்களில் ஈடுபட்டால் அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.
No comments:
Post a Comment