கட்டுமான பணிகள் பாதியில் தடைபடுவதற்கான காரணங்கள் என்ன?
வீடு கட்ட வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கான பணிகளை துவக்கிய பின், ஏதாவது சில காரணங்களால் பணிகள் பாதியில் முடங்குவதை பார்த்து இருப்போம். வெளியில் இருந்து பார்க்கும் போது, கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தப்படுவதற்கான காரணங்கள் முழுமையாக புரியாது. தனி நபர் அல்லது கட்டுமான நிறுவனம் என்று எதுவானாலும், புதிய திட்டத்தை செயல்படுத்தும் போது அதற்கான பணிகளை எப்படி தடையின்றி மேற்கொள்வது என்பதை திட்டமிட வேண்டும். குறிப்பாக, பணிகள் பாதியில் முடங்காமல் செல்வதற்கான செயல்திட்டம் இருக்க வேண்டும்.
தனி நபர் எனும் போது அவருக்கு இதில் போதிய அனுபவம் இருக்காது என்பதால், ஏதாவது பிரச்னை ஏற்பட்டு பணிகள் பாதியில் முடங்கலாம். தொடர்ந்து பல்வேறு இடங்களில் குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தும் கட்டுமான நிறுவனங்களின் திட்டங்களும் பாதியில் முடங்குவது ஏன் என்ற கேள்வி எழுகிறது. ஒரு இடத்தில் குடியிருப்பு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்த பின், அதற்கான பணிகளை எப்போது, எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். கட்டுமான திட்டம் தொடர்ந்து நடக்க வேண்டும் என்றால், அது சம்பந்தப்பட்ட விஷயங்களில் தெளிவுடன் உரிமையாளர்கள் இருக்க வேண்டும்.
தற்போதைய நிலவரப்படி, கட்டுமான திட்டங்கள் துவங்கிய வேகத்தில் விரைவாக நடக்க வேண்டும் என்றால் அதை முடக்கும் அடிப்படை விஷயங்கள் என்ன என்பதை மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும். கட்டுமான பணிக்கான பட்ஜெட் போட்டு அதற்கு தேவையான நிதியை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். உங்கள் வீட்டுக்கான கட்டுமான பணிகளை துவக்கும் நிலையில், அதற்கு குறைந்தபட்சம் முதல், 3 மாதங்களில் தேவைப்படும் நிதி இருப்பில் வைக்கப்பட வேண்டும். வங்கிக்கடன் வாயிலாக வீடு கட்டுவதாக இருந்தால், முதல் தவணைக்கு முன் உங்கள் பங்கு நிதியை தயாராக வைத்திருக்க வேண்டும். வீடு கட்டுவதற்கான மொத்த பட்ஜெட்டில், முதல், 20 சதவீத தொகையை உரிமையாளர் தான் செலவு செய்ய வேண்டும். இந்த பணத்தை உரிமையாளர் வைத்திருப்பதை நிரூபித்தால் தான் கடன்கொடுக்க வங்கிகள் முன்வரும், அத்துடன் இதை முதலில் உரிமையாளர் செலவு செய்ய வேண்டும்.
இதே போன்று, கட்டுமான திட்ட அனுமதி சார்ந்த பணிகளை முறையாக முடிக்காமல், வீடு கட்டும் பணிகளை துவக்கக் கூடாது. பெரும்பாலான இடங்களில் கட்டுமான திட்ட அனுமதி நடவடிக்கைகள் பாதியில் இருக்கும் போதே கட்டுமான பணிகளை துவக்கி விடுகின்றனர். இதில் முறையாக வரைபடம் தயாரிக்கப்பட்டிருந்தாலும், திட்ட அனுமதி கிடைப்பதில் ஏற்படும் தாமதம் கூட கட்டுமான பணிகள் பாதியில் முடங்க காரணமாகின்றன. குறிப்பிட்ட கால வரம்புக்குள் கட்டுமான அனுமதி கிடைக்க வேண்டும் என்பதை அரசு நிர்வாகம் உறுதி செய்தால், இப்பிரச்னை தவிர்க்கப்படும் என்கின்றனர் கட்டுமானதுறை வல்லுனர்கள்.
No comments:
Post a Comment