Wednesday, May 15, 2024

புதிய வீட்டுக்கு அலங்கார மின் விளக்குகளை தேர்வு செய்வதில் கவனிக்க

 புதிய வீட்டுக்கு அலங்கார மின் விளக்குகளை தேர்வு செய்வதில் கவனிக்க

புதிதாக வீடு கட்டும் போது அதன் ஒவ்வொரு பாகமும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு வகையாக யோசித்து செயல்படுகிறோம். இதில், வீட்டின் உள் அலங்காரம் எப்படி இருக்க வேண்டும் என்பதில், பலரும் கூடுதல் கவனம் செலுத்த துவங்கி இருக்கிறோம்.

ஆனால், இதற்கான சரியான வழிமுறைகள் என்ன என்பதில் ஏற்படும் குழப்பங்களால் பலரும் சரியான திட்டமிடல் எது என்று தெரியாமல் தவிப்பதை பார்க்க முடிகிறது. குறிப்பாக, உங்கள் வீட்டின் உட்புறத்தில் ஒவ்வொரு அறையும் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த ஒரு அடிப்படை எதிர்பார்ப்பு இருக்கும்.

இதில், அறைகளின் அளவுகள் அடிப்படையிலான எதிர்பார்ப்பு தான் பலருக்கும் பிரதானமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக அந்த அறையின் சுவர்களில் உள்ள வண்ணங்கள் தான் பிரதான எதிர்பார்ப்பாக பெரும்பாலான சமயங்களில் அமைந்து இருப்பதை பார்க்க முடிகிறது.

இந்த எதிர்பார்ப்புகள் அவசியமானவை தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது என்றாலும், இத்துடன் மேலும் சில விஷயங்களை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். உதாரணமாக, உங்கள் புதிய வீட்டின் படுக்கை அறையின் அளவு, அமைப்பு இப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கும் நீங்கள், அதில் விளக்குகள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் திட்டமிட வேண்டும்.

வீட்டின் ஒவ்வொரு அறையிலும் நல்ல காற்றோட்டம், வெளிச்சம் இருக்க வேண்டும் என்பது அடிப்படை வழிமுறையாகும். அதில் மின்சார விளக்குகள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் கட்டுமான நிலையிலேயே தெளிவாக திட்டமிட வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது.

இதில் என்ன திட்டமிட வேண்டியுள்ளது என்று கூட பலருக்கும் தோன்றலாம். ஒரு அறை என்றால் அதில் இரண்டு விளக்குகள், அதாவது எல்.இ.டி., விளக்குகள் அமைந்தால் போதும் என்று தான் பலரும் நினைக்கின்றனர். உண்மையில் வீட்டின் உட்புறம் அழகாக இருக்க வேண்டும் என்றால், சுவர்களின் வண்ணம் போன்று, விளக்குகள் தேர்விலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

புதிய வீட்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் போதே அதில் உள் அலங்காரம், மின் விளக்குகள் போன்றவற்றுக்கும் குறிப்பிட்ட தொகையை ஒதுக்குவது நல்லது. குறிப்பாக, அறைகளில் அடிப்படையான விளக்குகளுடன் கூடுதலாக அலங்கார விளக்குகளை அமைப்பது நல்லது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில், இத்தகைய அலங்கார விளக்குகள் விற்பனைக்கு என்றே தனியான பெரிய ஷோரூம்கள் வந்துவிட்டன.

மேலும், இணையதளம் வாயிலாகவும் அலங்கார விளக்குகளை தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இத்தகைய விளக்குகளில் பெரும்பாலானவை எல்.இ.டி., அடிப்படையில் தயாரிக்கப்படுவதால், மின்சார செலவு அதிகரித்துவிடுமோ என்ற அச்சம் வேண்டாம். சரியான விளக்குகளை தேர்ந்தெடுத்து வீட்டின் அறைகளை அழகானதாக்குங்கள் என்கின்றனர் உள் அலங்கார வல்லுனர்கள்.


No comments:

Post a Comment

மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு

  மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு 'சென்னை பெருநகர் பகுதிக்கான மூன்றாவது முழுமை திட்டத்துக்காக, 28 தலைப்ப...