வீடு கட்டுவதில மேல் தளத்துக்கான கான்கிரீட் போடும் பணியில் என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பதை தெளிவாக புரிந்து செயல்பட வேண்டும். குறிப்பாக, கட்டுமான பணியை ஒப்பந்ததாரரிடம் விட்டாலும் கான்கிரீட் போடும் பணி முறையாக நடக்கிறதா என்பதை சரி பார்க்க வேண்டியது உரிமையாளரின் பொறுப்பாகும்.
பொதுவாக வீடு கட்டுவதற்கான பணிகளை ஒப்பந்த முறையில் ஒருவரிடம் ஒப்படைக்கும் போது, மேல் தளம் அமைப்பது உள்ளிட்ட பணிகள் குறித்து உரிய முடிவுகள் எடுக்க வேண்டும். கட்டடத்தில், துாண்கள், பீம்கள், தளம் ஆகிவற்றின் அளவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் தெளிவான முடிவு எடுக்க வேண்டும்.
கட்டுமான பணியை ஒப்படைக்கும் ஒப்பந்தத்தில் இது போன்ற விஷயங்கள் குறித்த தொழில்நுட்ப விபரங்களை துல்லியமாக குறிப்பிட வேண்டும். கட்டுமான அமைப்பில் கம்பிகள் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதில் துவங்கி, கான்கிரீட் போட்ட பின் அதன் அளவுகள் என்ன என்பதை கவனிக்க வேண்டும்.
கட்டடத்தின் மொத்த பரப்பளவுக்கும் ஒரே நாளில் மேல் தளம் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். கம்பி கூடுகள் தயாரிப்பு, சென்ட்ரிங் பலகைகள் அமைப்பு ஆகிய பணிகளுடன் ஒயரிங் குழாய்களையும் சரியான முறையில் திட்டமிட்டு அமைக்க வேண்டும்.
இதில், கட்டட அமைப்பியல் பொறியாளர் வழிகாட்டுதல், கட்டட வடிவமைப்பாளர் பரிந்துரை அடிப்படையில் மேல் தளத்துக்கான அளவுகள் முடிவு செய்யப்பட வேண்டும். அனைத்து பகுதியிலும் மேல் தளம் ஒரே மாதிரி அமைக்கப்படுகிறதா என்றும், சமதளம் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்று பார்க்க வேண்டும்.
பொதுவாக ஒரு கட்டடத்தில் மேல் தளம் அமைப்பதில், 20 பேருக்கு மேல் பணிக்கு வந்துவிட்டால் அந்த இடமே அந்த இடமே பரபரப்பாகிவிடும். பணியாளர்களுக்குள் ஏற்படும் பரபரப்புகள், அவர்களை ஒருங்கிணைக்கும் நபர்களுக்குள் ஏற்படும் சலசலப்புகளுக்கு மத்தியில் பணியின் தரத்தை உரிமையாளர் கவனமாக பார்க்க வேண்டும்.
பெரிய கூட்டமாக பணியாளர்கள் ஈடுபட்டு இருந்தாலும், அடிப்படை பணியின் தரம் சரியாக இருக்க வேண்டும், அதில் எவ்வித குளறுபடியும் நடக்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, தளம் கான்கிரீட் பணிக்கு தேவையான பொருட்கள் போதுமான அளவுக்கு இருப்பு வைக்கப்பட வேண்டும்.
அதிக எண்ணிக்கையில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்களில் யாருக்காவது காயம் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன என்பதை உரிமையாளர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். இது போன்ற சமயங்களில் தேவையான முதலுதவி பொருட்களையும் அங்கு வைத்திருக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.
No comments:
Post a Comment