பதிவு சிக்கலில் இருக்கும் அறக்கட்டளை சொத்துக்களை வாங்கலாமா
சொத்துக்களை வாங்கும் போது அதை விற்பவர் யார் என்பதில் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். உரிமை கோரி வேறு யாரும் பிரச்சனை செய்யாத நிலையில் உள்ள சொத்தை மட்டுமே வாங்குவது நல்லது.
இதில் தனி நபர்கள் பெயரில் உள்ள சொத்துக்களை வாங்குவதைவிட, அறக்கட்டளை, தொழில் நிறுவனங்கள் பெயரில் உள்ள சொத்துக்களை வாங்குவதில் கூடுதல் விழிப்புணர்வு தேவை. குறிப்பாக, அறக்கட்டளை பெயரில் பதிவு செய்யப்பட்ட சொத்துக்களை வாங்குவதில் அதிக ஆய்வு அவசியம்.
நம் நாட்டில், அசையா சொத்துக்களை குடும்ப வாரிசுகளுக்கு நேரடியாக கொடுக்காமல், அதை ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தி நிர்வகிக்கும் பழக்கம் உள்ளது. இதன் வாயிலாக, பல்வேறு சமூக பணிகளும் நடந்து வருகின்றன.
அடிப்படையில் அறக்கட்டளை ஏற்படுத்தி சொத்து நிர்வாகம் செய்வது நல்ல வழிமுறை தான். ஆனால், அடுத்தடுத்த தலைமுறைகள் அதில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவதும் அவசியம்.
முந்தைய தலைமுறை ஏற்படுத்திய அறக்கட்டளையை அடுத்த தலைமுறையினர் சிறப்பாக செயல்படுத்தி இருப்பார்கள். இதில் சில கூடுதல் சொத்துக்களும் அறக்கட்டளை பெயரில் வாங்கப்பட்டு இருக்கும்.
ஆனால், அதற்கு அடுத்து வரும் தலைமுறையினரும் இதே வேகத்தில் செயல்படுவர் என்று எதிர்பார்க்க முடியாது. அவர்கள் அதிக அக்கறை காட்டாததால் அறக்கட்டளை வாயிலான சொத்து நிர்வாகம் சிதையலாம்.
ஒரு கட்டத்தில் அறக்கட்டளை தொய்வு நிலைக்கு சென்றுவிடலாம். இத்தகைய சூழலில் அதன் சொத்துக்களை விற்க வாரிசுகள் முற்படலாம்.
இது போன்ற சூழலில், சொத்து வாங்குவோர், பாரம்பரியமான அறக்கட்டளை ஆயிற்றே என்று ஆவண சரி பார்த்தலில் அலட்சியம் காட்டக் கூடாது. பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல் படுத்திய அறக் கட்டளையானாலும், சட்டத்தின் பார்வையில் நற்பெயர்கள் எடுபடாது.
அந்த அறக்கட்டளையின் பதிவு முறையாக புதுப்பிக்கப்பட்டுள்ளதா, நிர்வாகிகள் தரப்பில் சொத்து விற்பனையில் எடுக்கப்பட்ட முடிவு சட்டப்படி செல்லுமா என்று பார்க்க வேண்டும். நிர்வாகிகளுக்குள் யாருக்காவது ஆட்சேபம் இருந்தால் அந்த சூழலில், சொத்து வாங்குவோர் அலெர்ட் ஆவது நல்லது.
மேலும், தற்போது வரை அறக்கட்டளை முறையாக பதிவு செய்து, சட்டத்துக்கு உட்பட்டு செயல்படுகிறதா என்று பார்க்க வேண்டும். மேலும், விற்கப்படும் சொத்து வழங்கப்பட்ட போது, ஏதாவது நிபந்தனைகள் விதிக்கப்பட்டதா, அது விற்பனையை தடை செய்யுமா என பார்க்க வேண்டும் என்கின்றனர் சார்---பதிவாளர்கள்.
No comments:
Post a Comment