பவர் பத்திரங்களின் உண்மை தன்மையை அறிந்தால் நில மோசடி பிரச்னையை தவிர்க்கலாம்!
நிலம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள் என பல விஷயங்களை பட்டியலிடுகிறோம். அவற்றில் எல்லாம் முதன்மையாய் கவனிக்க வேண்டியது நில அபகரிப்பு தான். நில அபகரிப்பால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்று தான் பலரும் நினைக்கின்றனர். ஆனால், இதற்கான சரியான வழிமுறை எது என்பதை கண்டுபிடிப்பதில் தான் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன.
குறிப்பாக, புதிய சொத்து வாங்கும் போது, எங்கு, எப்போது, யாரிடம், எப்படி போன்ற கேள்விகளை எழுப்பி அதற்கான பதிலை நீங்களே கண்டுபிடிப்பது பிரச்னைகளை தவிர்க்க உதவும். இதில் பெரும்பாலும், பவர் பத்திரங்களை நம்பி வாங்கிய சொத்துக்களிலேயே வில்லங்கம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. உரிமையாளர் உயிருடன் இருக்கும் நிலையில் அவரிடம் இருந்து நேரடியாக சொத்து வாங்குவது நல்லது. அவரால் பத்திரப்பதிவுக்கு வர இயலாது என்பது போன்ற காரணங்கள் இருந்தால் மட்டுமே பவர் பத்திரங்களை பயன்படுத்துவது நல்லது.
சொத்து சம்பந்தமாக பவர் பத்திரம் வழங்கினால், அதில் குறிப்பிட்ட முத்திரைத் தீர்வு மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும். தன்மையாளர் மற்றும் முகவரின் கையெழுத்து, புகைப்படம் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும். தன்மையாளரின் சொத்து உரிமை சரி பார்க்கப்பட வேண்டும் மற்றும் முதன்மையாளரின் வருவாய், வருவாய்த் துறையினரால் வழங்கப்பட்ட நில உரிமைச் சான்றிதழும் சரிபார்க்கப்பட வேண்டும்.
மேலும், சொத்தின் அசல் பத்திரங்களின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்வது போன்று, பவர் பத்திரங்களையும் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். தேவைப்பட்டால், பவர் கொடுத்தவரிடம் நேரில் விசாரிப்பது நல்லது. பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள் தங்கள் பெயருக்கு நிலத்தை வாங்காமல், பவர் பத்திரம் வாயிலாக அதிகாரம் பெற்று அதன் அடிப்படையில் செயல்படுகின்றன. இதை வைத்து அந்த நிலத்தை மேம்படுத்துவது, வீடு விற்பனை போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இத்தகைய சூழலில், ஏராளமான வீடுகள் உள்ள திட்டங்களில் ஒவ்வொருவரும் பவர் கொடுத்தவரை நேரில் சந்திப்பது சாத்தியமில்லை. இது போன்ற சமயங்களில், பவர் பத்திரம் என்ன நோக்கத்தில் அளிக்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட விஷயங்களை ஆய்வு செய்யலாம்.
மேலும், பவர் கொடுத்தவர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான மருத்துவ சான்று இல்லாமல் பத்திரப்பதிவுக்கு செல்லாதீர். உரிமையாளர் உயிருடன் இருக்கிறார் என்பதை நிரூபிப்பதில் சம்பந்தப்பட்ட நிறுவனம் செயல்படும் விதம் குறித்தும் விழிப்புடன் இருக்க வேண்டும். பெரும்பாலான சமயங்களில் சொத்தின் உரிமை ஆவணத்தை ஆய்வு செய்யும் அளவுக்கு, பவர் பத்திரங்களை பலரும் ஆராய்வது இல்லை. இதில் காட்டப்படும் அலட்சியம் தான் பல்வேறு நில மோசடிகளில், வீடு வாங்குவோர் சிக்க காரணமாக உள்ளன என்கின்றனர் பதிவுத்துறை அதிகாரிகள்.
No comments:
Post a Comment