கம்பி கட்டு வேலையில் கவனக்குறைவு ஏற்பட்டால் அது கட்டடத்தை பாதிக்கும்!
புதிதாக கட்டப்படும் கட்டடங்கள் பெரும்பாலும் பிரேம்டு ஸ்ட்ரக்சர் முறையில் கட்டப்படுகிறது. இவ்வாறு, கட்டுவதில், அஸ்திவார தூண்கள், பீம்கள், மேல் தளம் ஆகியவை அத்தியாவசிய அமைப்புகளாக உள்ளன.இந்த அமைப்புகளுக்கான கட்டுமான பணியில் சில அடிப்படை விஷயங்களை புரிந்து செயல்பட வேண்டும். இக்கட்டுமானங்களின் அளவுகள் என்ன என்பதை ஆரம்ப நிலையிலேயே வரையறுக்க வேண்டும்.
அதாவது, பணி முடியும் நிலையில் என்ன அளவில் இருக்க வேண்டும் என்பதை கணக்கிட்டு அதற்கு ஏற்ற வகையில் செயல்பட வேண்டும்.
குறிப்பாக, கம்பி கூடுகள் அமைக்கும் போது, அவற்றுக்கும், வெளிப்புற தாங்கு பல கைகளுக்கும் இடைப்பட்ட பகுதியின் அளவை துல்லியமாக கணக்கிடுவது அவசியம். தூண்கள், பீம்கள் அமைப்பதில் கம்பி கூடுகளுக்கு நடுவிலும், வெளிப்புறத்திலும் கான்கிரீட் கலவை கொட்டப்படும். இந்த பகுதிகளின் அளவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை சரியாக கணக்கிட வேண்டும்.
கம்பி கூடுகளுக்கு வெளியில் கான்கிரீட் பரப்பு எப்படி அமைய வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். இதை துல்லியமாக பார்த்து தாங்கு பலகைகளை அமைப்பது அவசியம். இதில் கம்பிகளுக்கும், தாங்கு பலகைகளுக்குமான இடைவெளி குறைந்தால், அது கட்டுமானத்தை பாதிக்கும். அதே நேரத்தில், இந்த இடைவெளி தேவை இல்லாமல் அதிகமானாலும், சிக்கல் தான். இதே போன்று மேல் தளம் அமைப்பதிலும், கம்பி கூடுகள் தாங்கு பலகைகளுக்கு இடைப்பட்ட பகுதியின் அளவை சரியாக பராமரிக்க வேண்டும்.
இதில், கம்பி கூடுதல் தாங்கு பலகைகளை தொடாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள். இந்த இடைவெளியில் கான்கிரீட் கலவை நன்கு பரவ வழி செய்ய வேண்டும். மேல் தளம் அமைப்பு பணியின் போது, கான்கிரீட் கலவை பரவலை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக, கான்கிரீட் கலவை, சரியாக பரவாத நிலையில், அது நீர் கசிவு போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். எனவே, தாங்கு பலகைகள் அமைக்கும் போது அதில் மிகுந்த கவனத்துடன் செயல்படுங்கள் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.
No comments:
Post a Comment