கட்டுமான நிறுவனம் பரிந்துரை அடிப்படையில் வீட்டுக் கடன் பெறுவது பாதுகாப்பானதா ?
வங்கிகளின் வீட்டுக் கடன் திட்டங்களை நம்பி வீடு வாங்குவோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இதில் நடுத்தர மற்றும், குறைந்த வருவாய் பிரிவினர் பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றனர்.
முதலாவது நம் வீட்டின் மதிப்பில் எத்தனை சதவிகிதம் கடன் கிடைக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.அடுத்ததாக வீட்டுக் கடனுக்கான ப்ராசசிங் கட்டணம் , பேங்கிங் சார்ஜஸ் உள்ளிட்ட கட்டணங்கள் எவ்வளவு என்பதை கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.
மூன்றாவதாக வட்டி விகிதம் எவ்வளவு என்பதுடன் அது நிலையான வட்டி விகிதமா அல்லது மாறும் வட்டி விகிதமா என்பதை தீர்மானிக்க வேண்டும்.
அதிலும், முதல் முறையாக வீட்டுக்கடனுக்கான வங்கிகளை அணுகுவோரில் பலர், பொதுத்துறை வங்கிகளில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப் படுகின்றனர். வீட்டுக் கடன் என்று வருவோரை அமர வைத்து அவரது தேவைகள் என்ன, வங்கியின் நிலைப்பாடு என்ன, அளிக்க வேண்டிய ஆவணங்கள் என்ன, நடைமுறைகள் என்ன என்று பொறுமையாக எடுத்து சொல்ல பொதுத்துறை வங்கிகள் தயாரில்லை. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்கள் என்றால் அவர்களின் பிரதிநிதிகளுக்கு ராஜ மரியாதை கிடைக்கிறது.
இதனால், வீடு வாங்கும் பலரும், சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் பரிந்துரைக்கும் வங்கிகளில் கடன் பெறுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஏனெனில், அந்நிறுவனம் அதே வங்கியில் ஏற்கனவே கடன் வாங்கி இருக்கலாம். அந்த குடியிருப்பு திட்டத்தில் உங்களுக்கு முன் சிலர் அதே வங்கியில் கடன் வாங்கி இருக்கலாம். இதனால், நீங்கள் கடன் வாங்க செல்லும் போது, கூர்ந்தாய்வு பணிகள் மிக சுலபமாக முடிக்கப்படும்.
கட்டுமான நிறுவனங்கள் பரிந்துரைக்கும் வங்கியில் சென்றால் அலைக்கழிப்பு இன்றி விரைவாக வீட்டுக்கடன் கிடைக்கிறது என்பது சரி தான். அதே நேரம், இதில் கட்டுமான நிறுவனத்துடன் நல்ல நட்புறவில் இருக்கும் வங்கி அதிகாரிகள், அத்திட்டத்தில் இருக்கும் சில குறைபாடுகளை கண்டு கொள்ளாமல் விட்டுவிட வாய்ப்புள்ளது.
நம்மை அலைக்கழிக்கும் வங்கியை காட்டிலும், வரவேற்று விரைவாக கடன் கொடுக்கும் வங்கிகள் நல்லது என்று தான் அனைவருக்கும் தோன்றும். அது ஒரு விதத்தில் சரியானதாக கூட இருக்கலாம். இத்தகைய சூழலில், அந்த சொத்து தொடர்பான வில்லங்கம் ஏதாவது மறைக்கப்படவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு மறைக்கப்படும் வில்லங்கம் எதிர்காலத்தில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.
ஒவ்வொருவரும் அவர்களது வருமானத்தின் அடிப்படையில்தான் கடன் வாங்க வேண்டும். அனைத்து வகையான கடன்களையும் சேர்த்து ஒருவர் அதிகபட்ச மாக தன் வருமானத்தில் 50 சதவீதம் தவணை செலுத்தும் அளவுக்குத்தான் கடன் வாங்க வேண்டும் என்ற ஒரு பொதுவான மதிப்பீடு உள்ளது.
எனவே, கட்டுமான நிறுவனம் பரிந்துரைக்கும் வங்கியில் கடன் வாங்குவதாக இருந்தாலும், தனியாக வழக்கறிஞர் வாயிலாக சொத்தின் வில்லங்கத்தை ஆய்வு செய்வது நல்லது. இது போன்ற செயல்களால் எதிர்கால பிரச்னைகள் தவிர்க்கப்படும் என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.
No comments:
Post a Comment