சொந்தமாய் தனி வீடு கட்டி வாழ்வதே மிகப் பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இதில், ஒவ்வொருவருக்கும் அவர்களின் வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். வீட்டின் கட்டமைப்பு, முகப்பு, உள் அறைகளின் வடிவமைப்பு, படிக்கட்டுகள், வாசலின் முன் கேட், வீட்டின் நிறம் என, ஒவ்வொரு கட்டத்திலும் வித்தியாசமாய், அழகாய் இருக்க வேண்டும் என விரும்புவோம்.
இப்படி ஆசை இருந்தால் மட்டும் போதாது. அது குறித்த விபரங்களும், அதற்கான உரிய வழிமுறைகளையும் கடைபிடிப்பது மிகவும் அவசியம். இதில் பெரிய அளவில், பிரபலமான உள் அலங்கார நிறுவனங்களை அணுக வேண்டும் என்ற எண்ணம் வேகமாக பரவி வருகிறது. இல்லவேயில்லை. அதிக பணம் வைத்துக் கொண்டு, புதிய நவீன தொழில்நுட்பம் இதுதான் என ஒரு வட்டத்தைப் போட்டு, மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்கின்றவர்களுக்கு வேண்டுமானால் இது பொருந்தலாம்.
நம் கனவு வீடு எந்த அளவில் எந்த வடிவமைப்பில், எத்தனை அறைகளோடு இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அளவுக்கு நமக்கு விழிப்புணர்வு இருக்கும் பட்சத்தில், நம் வீட்டின் உள் அலங்காரமும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற முடிவும் நம் கையில் இருக்க வேண்டும்.
நீங்கள் பயன்படுத்தும் வீடு எப்படி இருக்க வேண்டும் என்பது உங்கள் முடிவாக இருக்க வேண்டும். உள் அலங்காரம் என்பதன் அடிப்படையை புரிந்து செயல்பட்டால் இதில் பல்வேறு பிரச்னைகளை தவிர்க்கலாம்.
பல இடங்களில் உள் அலங்காரம் என்ற பெயரில் வீட்டை காட்சி கூடமாக மாற்றுகின்றனர். வீடு என்பது நாம் தங்குவதற்கு, குடும்பமாய் வாழ்வதற்கு தான். கண்காட்சி மாதிரி பொருட்களை அலங்கரித்து காட்சிப்படுத்துவதற்கு அல்ல. இப்படி செய்வது முற்றிலும் தவறான நடைமுறையாகும்.
உள் அலங்காரம் என்ற பெயரில் வீட்டின் பல்வேறு பகுதிகளை காட்சி கூடமாக மாற்றுவதால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக, உங்களுக்கு ஏற்படும் சின்ன ஆசைகள் கூட, அலங்காரம் கெட்டு விட கூடாது என்பதற்காக தடை செய்யப்படும். மூச்சு விடக் கூட பயந்து, மூச்சை பொறுமையாய் விடுவது போல் ஆகி விடும்.
வீடு என்பது உங்கள் பயன்பாட்டுக்காக தான். அதில், எந்த இடத்தை, எப்படி பயன்படுத்த வேண்டும், எந்தெந்த பொருட்கள் எங்கு இருக்க வேண்டும் என்பதில் ஒரு வழிமுறையை உருவாக்குவதே உள் அலங்காரம்.
இந்த அடிப்படை நோக்கத்தை புரிந்து, அதன் அடிப்படையில், வீட்டை நெறிப்படுத்தினால் போதும். புதிய வீட்டில், எந்தெந்த இடத்தில் அலமாரி இருக்க வேண்டும். அதன் அடுக்குகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள். வரவேற்பறை சோபா, பர்னீச்சர்கள், சாப்பாட்டு மேஜை, அலங்கார விளக்குகள், வளைவுகள் என ஒவ்வொன்றிலும் இவையெல்லாம் தேவையா என்பதில் துவங்கி கவனம் வையுங்கள்.
உதாரணமாய், அலமாரிக்கு கதவுகள் வேண்டுமா என்பதை முடிவு செய்யும் நிலையில், அது தினசரி பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்கிறதா என்று பாருங்கள். அலமாரியென்றாலே கதவுகள் போட்டு மூடி வைக்க வேண்டுமென்றில்லை.
என் வீடு, என் விருப்பம் என்பதற்காக, பொருட்களை எங்கு வேண்டுமானாலும் போட்டு வைக்கலாம் என்பதல்ல.
அதை ஒரு நெறிக்கு உட்பட்டு செயல்படுத்துவதில் தான் வீட்டின் அலங்காரம் அமையும் என்கின்றனர் உள் அலங்கார வல்லுனர்கள்.
No comments:
Post a Comment