வீட்டு மனைகளுக்கு கூட்டு பட்டா பெறுவதற்கான வழிமுறைகள் என்ன?
சொத்து பரிமாற்றத்தில், பெரும்பாலும் கிராமங்களில், கூட்டு பட்டா என்ற வார்த்தை அதிகமாக பயன்படுத்தப்படும். நகரங்களில், ஒவ்வொருவரும், தனி வீடு என்று சொத்து வாங்குவதால், தனியாக பட்டா வாங்கிக் கொள்கின்றனர்.
ஆனால், கிராமங்களில் இன்றும், ஒரே குடும்பத்தை சேர்ந்த நபர்கள், கூட்டமாக சொத்துக்களை வாங்குவது வழக்கமாக உள்ளது. இதில், கூட்டு பட்டா என்பதை, எப்படி அணுக வேண்டும் என்பதில், பலருக்கும் சந்தேகம் உள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள், அடுத்தடுத்த சர்வே எண்களில் உள்ள சொத்தை வாங்கும்போது, அவர்கள் கூட்டு பட்டா கோரி விண்ணப்பிக்கலாம். ஆனால், அவர்கள் குடும்ப உறவினர்களாக இல்லாத நிலையில், கூட்டு பட்டா கிடைக்காது.
அதே நேரத்தில், கூட்டு பட்டாவில் உள்ள சொத்துக்களில், ஒரு பகுதியை மட்டும் வாங்கும் வெளியார், பட்டா மாறுதலின் போது, தன் முடிவை எடுக்கலாம். அவர் கூட்டு பட்டாவில், இணையலாம் அல்லது தனி பட்டாவும் பெறலாம்.
பெரும்பாலும், பரம்பரை சொத்துக்களை வாரிசுகள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதில் மட்டுமே கூட்டு பட்டா வாங்குவது வழக்கத்தில் உள்ளது. மற்றபடி, கூட்டாக சொத்து வாங்கும் உறவினர்கள் இதை ஏற்கின்றனர்.
கூட்டு பட்டா சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட சரியான நடைமுறை என்றாலும், தனியாக சொத்து வாங்குவோருக்கு, இதில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்படுகின்றன. கூட்டு பட்டாவில் உள்ள சொத்துக்களை வாங்கும் போது, அதில் உரிமையாளர் குறித்த உண்மை தன்மையை சரிபார்ப்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
குறிப்பாக, கூட்டு பட்டாவில் உள்ள ஒரு சொத்தை வாங்கியவர், தன் பெயருக்கு பட்டா மாறுதல் செய்யாத நிலையில், அது அடுத்தடுத்து கைமாறுகிறது. இவ்வாறு கைமாறும் சொத்தை வாங்குவோர், பட்டா யார் பெயரில் உள்ளது என்பதையும், தற்போது விற்பவருக்கு அது எப்படி வந்தது என்பதையும் தெளிவுபடுத்தி கொள்வதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
புதிதாக சொத்து வாங்குவோர், அந்த சொத்தின் கூட்டு பட்டாவில் விற்பனையாளர் இருக்கிறாரா என்பதை பார்க்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், பட்டா பிரிக்காமல் இருந்ததற்கு காரணம் என்ன என்பதையும் விசாரிக்க வேண்டும். கூட்டு பட்டாவில் இருக்கும் இதர ஆட்கள், எந்த ஆட்சேபனையும் இல்லையென்று கடிதம் எழுதி கொடுக்க வேண்டும். இதை முதலில், வி.ஏ.ஓ., சரி பார்த்து, பின், தாசில்தார் சரி பார்த்த பின்தான் தனிப் பட்டாவாக மாற்றி கொடுக்கப்படும்.
இதர ஆட்களும் இதே போல் செய்து, அவர்களும் தனி பட்டாவாக மாற்றி கொள்ள முடியும்.
மேலும், கூட்டு பட்டாவில் இருக்கும் சொத்தை வாங்கும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
தனி மனைகள், விற்பனை, அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் பரவலாக வந்த பின், கூட்டு பட்டா என்ற நடைமுறை மெல்ல மறைந்து வருவதாக கூறப்படுகிறது.
புதிதாக தனி வீடு, மனை வாங்குவோர், அந்த சொத்து, கூட்டு பட்டாவில் இருந்து பிரிந்திருந்தால், அது குறித்த முழுமையான விபரங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர், வருவாய் துறை அதிகாரிகள்.
நன்றி : தினமலர் கனவு இல்லம்