பழைய வீட்டை வாங்குவோர் சந்திக்கும் புதிய சிக்கல்கள் என்ன?
பொதுவாக சொந்த வீடு வாங்குவோர், புதிய வீட்டை தான் முதல் தேர்வாக வைத்திருப்பர். ஆனால், எதார்த்த நிலவரத்தில் விலைவாசி வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினரால், புதிய வீட்டை அதிக விலை கொடுத்து வாங்க முடியாத சூழல் நிலவுகிறது.
இதன் காரணமாக, நம் பட்ஜெட்டுக்கு உட்பட்டு குறைந்த விலையில் கிடைக்கும் வீடுகளை தேடி அலைகின்றனர். இதில், சிலர் பட்ஜெட்டுக்குள் அடக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இரண்டு படுக்கை அறை வீடு வாங்க வேண்டிய தேவை இருந்தாலும், ஒரு படுக்கை அறை வீடு வாங்குவதை பார்க்க முடிகிறது.
இதே போன்று வேறு சிலர், நகரின் மையப்பகுதியில் அதிக விலை நிலவும் சூழலில், தங்கள் பட்ஜெட்டை கவனத்தில் வைத்து, வெளி மாவட்டங்களில் குறைந்த விலை வீட்டை தேர்வு செய்கின்றனர். இவ்வாறு வெகு தொலைவில் சென்று வாங்கும் வீட்டை முறையாக பயன்படுத்துவதில், பல்வேறு சிக்கல்கள் ஏற்படும்.
இதனால், பெரும்பாலான மக்கள் பட்ஜெட்டுக்குள் முடிக்க வேண்டும், அதே நேரத்தில் தேவையும் முறையாக பூர்த்தியாக வேண்டும் என்பதற்காக, பழைய வீடுகளை வாங்குகின்றனர். நீங்கள் பழைய வீட்டை வாங்குவதாக முடிவு செய்தால், அதிகபட்சம்,10 ஆண்டுகள் வரையிலான பழைய வீடுகளை தேர்ந்தெடுக்கலாம்.
அதற்கு மேல், அதிக ஆண்டுகள் கழித்த பழைய வீடு என்றால், அதை வாங்கிய நீங்கள் வீட்டுக்கடனை முடிப்பதற்குள், கட்டடம் மோசமான நிலைக்கு சென்றுவிடும். கட்டி முடிக்கப்பட்டதில் இருந்து, 10 ஆண்டுகள் வரையிலான வீடுகள் என்றாலும் அதை முறையான பரிசோதனை இன்றி வாங்குவது நல்லதல்ல.
கட்டட அமைப்பியல் பொறியாளர் வாயிலாக, அந்த கட்டடத்தின் உறுதித்தன்மை, குறிப்பாக துாண்களின், கான்கிரீட் தளங்களின் உறுதியை ஆய்வு செய்து, வீடு வாங்குவது நல்லது. மேலும், அந்த கட்டடம் நீங்கள் பார்க்கும் நிலையில் எப்படி உள்ளது என்பதை துல்லியமாக கவனிக்க வேண்டும்.
பழைய வீடு வாங்குவதற்கு வங்கிகள் வீட்டுக்கடன் கொடுக்குமா என்பதில், பலருக்கும் சந்தேகம் நிலவுகிறது. பழைய வீடு வாங்குவதற்கு வங்கிகள் கடன் கொடுப்பதில் எவ்வித பிரச்னையும் இல்லை. இதில், பொது மக்கள் எவ்வித சந்தேகமும் அடைய வேண்டியதில்லை.
குறிப்பாக, பழைய வீடுகளுக்கு, அதன் மொத்த மதிப்பில், 80 சதவீத தொகையை வங்கிகள் கடனாக கொடுப்பதுடன், பத்திரப்பதிவுக்கான செலவு தொகையையும் சேர்த்து கடன் கொடுக்கும். இதனால், பழைய வீடு வாங்குவோர் வங்கிக்கடன் பெறுவதற்கு முறையாக விண்ணப்பிக்கலாம்.
பழைய வீடு வாங்கும் போது, உரிமையாளர் சொல்லும் தொகையுடன், அந்த வீட்டில் சீரமைப்பு பணிக்கான செலவு, பத்திரப்பதிவுக்கான செலவு ஆகியவற்றையும் கருத்தில் வைத்து, விலை பேசுவது நல்லது.
ஏனெனில், பழைய வீட்டை வாங்கும் போது அதில் உடைப்புகள் உள்ளிட்ட விஷயங்களை சரி செய்வது, மிக முக்கிய பணியாக உள்ளது என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.